"பொறியியல் படிப்புக்கான (பி.இ.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15
தேதிக்குள் முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. பி.இ. மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை, ஜூன் 27 -ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், 'நீட்' தேர்வு முடிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு ஜூலை 17 -ஆம் தேதிதான் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளில் சிறப்புப் பிரினருக்கும், அதன் பிறகு பொதுப் பிரிவினருக்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் சேர்க்கை நடைபெறும். அதன் பிறகே, பி.இ. கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசித்து வந்தனர். இந்த நிலையில், உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் தலைமையில் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சென்னைத் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், பி.இ. கலந்தாய்வை ஆகஸ்ட் 15 -ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற உயர் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியது: எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கி முதல்கட்ட சேர்க்கை முடிந்த பின்னர், பி.இ. கலந்தாய்வைத் தொடங்குவது எனவும், ஆகஸ்ட் 15 -ஆம் தேதிக்குள் பி.இ. சேர்க்கையை முடித்துவிடுவது எனவும் முடிவு செய்துள்ளோம். அதற்கேற்ற வகையில் கலந்தாய்வுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். அதாவது, இதுவரை பி.இ. கலந்தாய்வில் 50 கணினிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இம்முறை இந்த எண்ணிக்கையை 60 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். அதேபோல், இதுவரை ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்குத் தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு பிரிவு என நாள் ஒன்றுக்கு 8 பிரிவுகளாக கலந்தாய்வு நடத்தப்படும். இதை இம்முறை 9 பிரிவுகளாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கான அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். அனுமதி கிடைத்ததும், தேதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். இந்தத் தேதிகளுக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில், பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 16 -ஆம் தேதி தொடங்கப்பட்டு விடும் என்றார் அவர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.