WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 1, 2024

தள்ளிப்போகிறது பள்ளிகள் திறப்பு .

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால், பெற்றோரும், ஆசிரியர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். சுட்டெரிக்கும் கடும் வெயில் காரணமாக, தமிழக அரசு இம்முடிவை எடுத்துள்ளது.


அரசு மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் மற்றும் பொது தேர்வுகள் முடிந்து, ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், ஏப்ரல் 17 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.


மாற்றம்



கல்வி ஆண்டின் முதல் வேலை நாளான, ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஆனால், லோக்சபா தேர்தல் முடிவுகள், வரும் 4ல் வெளியாவதன் காரணமாக, பள்ளிகள் திறப்பு தேதி, ஜூன் 6க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பள்ளி களை திறப்பதற்கான பணிகள் நடந்து வந்தன.

அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று மாலைக்குள் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை அனுப்பும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. பள்ளி திறக்கும் நாளில், மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில், வடமாநிலங்களில் கடும் வெப்பம் வாட்டுகிறது. தலைநகர் டில்லியில், 126 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியுள்ளது. ராஜஸ்தான், பீஹார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், 45 முதல் 50 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

பீஹாரில் ஷேக் புரா பகுதியில் உள்ள பள்ளியில், கடந்த மாதம் 29ம் தேதி வெயிலின் தாக்கத்தால், மாணவியர் பலர் மயக்கம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக கோடை வெயிலின் தாக்கம் மீண்டும் கடுமையாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில், 18 இடங்களிலும்; நேற்று ஒரே நாளில், 19 இடங்களிலும், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.

சென்னையில் எப்போதும் இல்லாத வகையில், 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகிறது.


வலியுறுத்தல்



இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் வரும் 6ம் தேதி திறக்கப்படவிருந்த பள்ளிகள், வெப்ப தாக்கத்தின் காரணமாக, வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் போது, பள்ளிகளை திறந்தால் மாணவ - மாணவியர் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்பட்டது. எனவே, பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, பள்ளிகள் திறப்பை வரும் 10ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் அறிவொளி நேற்று அறிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், வரும் 9 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. அனைத்து வகை பள்ளிகளும், 10ம் தேதி திங்கள் கிழமை திறக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.