சென்னை: திருவொற்றியூரில், அரசு கல்லூரி துவங்கி, மூன்றாண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை அதற்கு என, புதிய கட்டடம் கட்டப்படவில்லை.
திருவொற்றியூரில், சென்னை பல்கலைக்கழகத்தின், கலை அறிவியல் கல்லூரி, 2012ம் ஆண்டு துவக்கப்பட்டது. புதிதாக கட்டடம் கட்டும் வரை, திருவொற்றியூர் பூந்தோட்ட தொடக்க பள்ளி கட்டடத்தில், கல்லூரி தற்காலிகமாக செயல்படும் என, அறிவிக்கப்பட்டது.
இடப்பற்றாக்குறை:
கல்லூரி துவங்கி, மூன்று கல்வி ஆண்டுகள் முடியும் தருவாயில் உள்ளன. கல்லூரிக்கு என, இதுவரை புதிய கட்டடம் கட்டப்படவில்லை. கல்லூரி துவங்கிய முதலாம் ஆண்டில், 251 மாணவ, மாணவியரும்; இரண்டாம் ஆண்டில், 221 பேரும்; மூன்றாம் ஆண்டில், 218 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
* பள்ளியில், இடப்பற்றாக்குறையால், காலை 8:00 முதல், பிற்பகல் 1:00 மணி வரை; பிற்பகல் 1:00 முதல், மாலை 6:00 மணி வரை என, சுழற்சி முறையில் கல்லூரி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
* போதிய வகுப்பறைகள் இல்லாததால், பள்ளியின் பரிசோதனை கூடமே, வகுப்பறையாக செயல்படுகிறது.
* கல்லூரிக்கு என, நூலகம் கிடையாது.
* ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, இதுவரை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்லூரிக்கு என, புதிய கட்டடம் கட்ட, எர்ணாவூர் மேம்பாலம் அருகே, 4.5 ஏக்கர் காலி நிலம், திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை மூலம், இரு ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த இடத்தில், 7.25 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்ட பூஜை போடப்பட்டது. அப்போதுதான், அந்த இடம் கனிமவள நிறுவனத்திற்கு, வருவாய் துறை, ஏற்கனவே கொடுத்திருப்பது, தெரியவந்தது. அதனால், கல்லூரிக்கு வேறு இடத்தில் கட்டடம் கட்டப்பட உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், இடம் தேர்வு செய்து கொடுத்தால், கட்டடம் கட்டப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
முடிவு யாரிடம்?
இதுகுறித்து, கல்லூரி முதல்வர் கூறுகையில், ”திருவொற்றியூரில் இடம் கிடைக்காததால், கல்லூரி செயல்படும் இடத்தில், பல அடுக்கு கட்டடம் கட்டி பயன்படுத்தலாம். இதுகுறித்து, வருவாய் துறை மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள்தான், முடிவு செய்ய வேண்டும்,” என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.