பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் இந்தியப்பண்பாடு
பாடப்பிரிவை தேர்வு செய்து படித்த மாணவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுகளை எழுத முடியாமல் தவிக்கும் நிலை நீடித்து வருகிறது.
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியானது பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏழை மாணவர்களுக்காக பழனி திருக்கோயில் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட கல்லூரி ஆகும். கடந்த 1963ல் அருள்மிகு பழனியாண்டவர் பண்பாட்டுக்கல்லூரி என துவங்கப்பட்ட இக்கல்லூரியில் பி.ஏ., இந்தியப்பண்பாடு என்பது ஒரு பாடப்பிரிவாகும். இந்த பாடப்பிரிவு பழனியாண்டவர் கல்லூரி, பூம்புகாரில் உள்ள திருக்கோயில் கல்லூரி உட்பட சில கல்லூரிகளிலேயே உள்ளது. இதனால் அந்த காலத்தில் இப்பாடப்பிரிவுக்கு தனி மகத்துவம் இருந்தது.
தமிழக கலாச்சாரம், கட்டிடக்கலை, இந்து சமயம், மனித நடத்தை, சைவம், வைணவம் போன்றவை பாடப்பிரிவுகளாக உள்ளது. தற்போது நவீனமயமாதலுக்கு ஏற்ப கணினியும் ஒரு பாடப்பிரிவாக உள்ளது. இதில் முதுகலை பட்டப்படிப்பும் உள்ளது. சுமார் ஐம்பது ஆண்டுகாலப் பெருமை உள்ள இந்த பாடப்பிரிவுக்கு தற்போது ஆசிரியர் தேர்வு எழுதுவதற்கான தகுதி இல்லாத நிலை நீடித்து வருகிறது. பி.ஏ., பி.எஸ்சி., போன்ற பட்டப்பிரிவில் ஏராளமான பிரிவுகளை படித்தவர்களுக்கு கூட ஆசிரியர் தேர்வு வாரியம் வாய்ப்பு வழங்கி வரும் நிலையில் இந்தியப்பண்பாடு கேட்பாரற்று உள்ளது. இந்த பாடப்பிரிவை படித்த நூற்றுக்கணக்கானோர் ஆசிரியராகும் கனவு தகர்ந்த நிலையில் சோகத்தில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட பி.ஏ., டூரிஸம் பாடம் படித்தவர்கள் பி.ஏ., வரலாறுக்கு இணையானதாக படித்தவர்களாக கருதி ஆசிரியர் தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதை பல்கலைக்கழகங்கள் எதற்கு இணையானது என்று தெரிவிக்காமல் உள்ளது. அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் என அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு தமிழ்க்கலாச்சாரம், இந்தியப்பண்பாடு ஆகியவை இருந்தால் மட்டுமே உலகில் இந்தியா முன்னேறும் என முழக்கம் மட்டும் இடும் நிலையில் இந்தப்பாடப்பிரிவு கேட்பாரற்று உள்ளது.
இந்தப்படிப்பை ஏன் படித்தீர்கள் என பயிற்றுவித்த சிலரே கேட்கும் போது படித்த மாணவர்கள் பதில்பேச முடியாமல் உள்ளனர். பழனியை அடுத்த கொடைக்கானல் புதுப்புத்தூரை சேர்ந்தவர் நாட்ராயன் மகன் ராதாகிருஷ்ணன். இவர் பழனியாண்டவர் கல்லூரியில் இந்தியப்பண்பாடு பாடத்தை மிகச்சிரமப்பட்டு சிபாரிசின் பேரில் சேர்ந்து படித்துள்ளார். இந்தியப்பண்பாட்டில் 2000ம் ஆண்டில் இளங்கலை பட்டம், 2002ம் ஆண்டில் முதுகலை பட்டம் 2003ம் ஆண்டு எம்.பில்., படித்துள்ளார். ஆசிரியராக வேண்டும் என்ற கனவில் 2011ம் ஆண்டு பி.எட். பட்டமும், 2012ம் ஆண்டு எம்.எட்., பட்டமும் படித்துள்ளார். இந்தப்படிப்புகள் தவிர லைப்ரரி சயின்ஸ் பாடத்தில் பட்டப்படிப்பும், பி.ஏ., ஆங்கில இலக்கியமும், காந்தீய படிப்பில் பட்டயமும் படித்துள்ளார். மலைக்கிராம வாசியான இவர்தான் அந்த ஊரிலேயே அதிகம் படித்தவர் ஆவார். ஆசிரியர் கனவில் இவ்வளவும் படித்த இவர் தற்போது இந்தியப்பண்பாடு படிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அங்கீகாரம் இல்லாததால் வேலைவாய்ப்பின்றி திண்டாடி வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, மலைகிராமத்தில் புறம்போக்கு இடத்தில் சுமார் 50 ஏக்கரை பண்படுத்தி விவசாயம் செய்து வந்தோம். இலங்கை அகதிகளுக்காக அதை அப்படியே விட்டு விட்டு வந்தோம். அந்த இடம் இப்போது ஊராகவே மாறிவிட்டது. படிப்புக்காக இருந்த வீட்டையும் விற்று விட்டோம். அப்பாவுக்கு தற்போது 90 வயதாகி விட்டது.
ஆனால் ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. வேலைக்காக செல்லும் இடத்தில் எல்லாம் வார்டன் வேலை, ரெப்ரசென்டேடிவ் வேலை, கேண்டீன் சூபர்வைசர் என சுமார் ஐந்தாயிரம் ரூபாய் மாத சம்பளத்துக்கே வேலை தருகின்றனர். இதற்கு பத்தாவது படித்தால் போதுமானது. இந்தியப்பண்பாட்டை படித்ததற்கு இப்போது மிகவும் கவலைப்பட வேண்டி உள்ளது. எனக்கு மட்டுமல்ல, இதை படித்த பல மாணவர்கள் நிலையும் இப்படித்தான் உள்ளது. எனக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இனிநான் வேறு எந்த பாடத்தை படித்து ஆசிரியராக வேலைக்கு சேர இயலும். ஆகவே, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக உயர்மட்டக்குழு அதிகாரிகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இந்தியப்பண்பாட்டு படிப்பை ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புக்கு இணையாக ஆணைகள் பிறப்பித்தால் தேர்வுகளை எழுதலாம். இதனால் தற்போதே இந்தியப்பண்பாட்டுத்துறையை படிக்க யாரும் ஆர்வமின்றி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.