அரசு பள்ளிகளில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகளில், முப்பருவ கல்வி
முறையில், சமச்சீர் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்வியாண்டை, மூன்று பருவங்களாக பிரித்து, நான்கு மாதத்துக்கு ஒரு பருவம் என்ற அடிப்படையில், பாடப்புத்தகம் வழங்கி, தேர்வு நடத்தப்படுகிறது. நாளுக்கு நாள் கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்நுட்பம், அபாரமாக வளர்ந்து, முன்னேற்றமடைந்து வரும் நிலையில், அதுசார்ந்த தொழில்நுட்பங்களை, மாணவ - மாணவியருக்கு, கல்வித்துறை வழங்க வேண்டியது அவசியமாகிறது.
தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்களில், துவக்கத்தில் இருந்தே, 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாடம் கற்பிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் உள்ள கல்வி திட்டத்திலும், இதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளில் மட்டும், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' புறக்கணிக்கப்படுவது, கவலை அளிப்பதாக உள்ளது.
கடந்த, 2011ல், தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை, 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கான பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன. ஓராண்டு மட்டுமே செயல்பாட்டில் இருந்த, இப்பாடத்திட்டம், அடுத்த கல்வியாண்டில், எவ்வித காரணமும் இல்லாமல் கைவிடப்பட்டது.
கடந்த, 2004 முதல்,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மட்டுமே, 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாடம் உள்ளது. கடந்த ஆண்டுகளில், 1, 200 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன; அப்
பள்ளிகளில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாடத்திட்டம் கொண்டு வரப்படவில்லை. அதற்கான ஆய்வகங்கள் இருந்தும், பயன்படுத்த முடியாமல் ஆசிரியர்களும், மாணவர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
மத்திய அரசு, 'டிஜிட்டல் இந்தியா' போன்ற திட்டங்களை அறிவித்துள்ளது; தமிழக அரசும், மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்கி, கம்ப்யூட்டர் அறிவை வளர்க்குமாறு அறிவுறுத்துகிறது. அதேநேரம், பள்ளிகளில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாடத்திட்டத்தை செயல்படுத்துவதிலும், அதற்கான ஆசிரியர்களை நியமிப்பதிலும், அரசு அக்கறையின்றி உள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாடத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; அதற்கேற்ப, ஆசிரியர் நியமிக்க வேண்டும் என, மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.