''பெற்றோரின் அச்சத்தை போக்கும் வகையில், பள்ளிக்கல்வியின் புதிய பாடத்திட்டம் அமையும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வியில், புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியில், பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய உயர்மட்டக் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, புதிய பாடத்திட்டம் தொடர்பான, கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன், வரவேற்றார்.
கருத்தரங்கில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது: இந்தியாவில், தமிழக பள்ளிக்கல்வித்துறை எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி செல்கிறோம்.
பள்ளிக்கல்வியின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி செல்லும் வகையில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு, கல்விதான் வருங்கால சொத்து; அதை சிறப்பாக வழங்க, தேவையான நடவடிக்கை எடுக்கிறோம்.
பொதுத்தேர்வு மையங்கள், சில இடங்களில் துாரமாக இருப்பதால், மாணவ, மாணவியருடன், பாதுகாப்புக்காக, பெற்றோரும் அலைய வேண்டிய நிலை உள்ளது. இதை மாற்ற, வரும் பொதுத்தேர்வில், புதிதாக, 70 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
மத்திய அரசு நடத்தும், எந்த நுழைவு தேர்வையும், தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், 58 ஆயிரம் வினா, விடை கொண்ட புத்தகம் வழங்கப்படும்.
நாடு முழுவதும் முன்னணியில் உள்ள பாடத்திட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம். சிறந்த கல்வியாளர்கள் மூலம், பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. மூன்று மாதங்களில், புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வோம்.
'நமது பிள்ளைகள், உயர் கல்விக்கு செல்ல முடியுமா' என, பெற்றோர் பயப்பட வேண்டாம். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், உயரிய பாடத்திட்டம் தயாரிக்கப்படும். எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தகர்த்து, இந்த அரசு சிறப்பாக செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.