மாவட்டத்தில் கடலுார் உட்பட மூன்று கல்வி மாவட்ட (பொறுப்பு) டி.இ.ஓ.,க்கள் நியமனத்தில் முன்னுரிமை பட்டியலை புறக்கணித்து, விதிமீறல் நடந்துள்ளதாக மூத்த தலைமை ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்தில் தொடர்ந்து பின்தங்கும் நிலை உள்ளது. இதைத்தவிர்க்க, கடலுார், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களுடன் வடலுார், சிதம்பரம் என கூடுதலாக பிரித்து, கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.அதன்படி, நான்கு கல்வி மாவட்டங்களுக்கு டி.இ.ஓ.,க்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக பணிபுரிந்த ஆஷா கிறிஸ்டி எமரால்டு, சிதம்பரம் கல்வி மாவட்ட டி.இ.ஓ.,வாக, நிரந்தரமாக நியமிக்கப்பட்டார்.
ஆனால், கடலுார், வடலுார், விருத்தாசலம் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு பொறுப்பு டி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுவாக, டி.இ.ஓ., வாக பணிபுரியும் அலுவலர்கள் பதவி உயர்வு, பணியிட மாறுதல் மற்றும் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும்போது, அந்த இடங்களில் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம்.
இதற்கென பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி, அந்தந்த கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணி முன்னுரிமை பட்டியலில் மூத்தவராக அல்லது கல்வி மாவட்டத்தில் மூத்த தலைமை ஆசிரியராக இருக்க வேண்டும். மாறாக, முன்னுரிமை இல்லாத நபர்களை பொறுப்பு டி.இ.ஓ.,வாக நியமிக்கக் கூடாது.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி கடலுார் டி.இ.ஓ., சரஸ்வதி பணி மாறுதல் செய்யப்பட்டார். அவரது பணியிடத்திற்கு பொறுப்பு டி.இ.ஓ., நியமிக்க வேண்டி, அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மூத்த தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலின்படி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் தலா மூவர் பெயர்களை, விதிகளுக்குட்பட்டு பள்ளிக் கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், பரிந்துரை செய்யப்பட்ட 6 தலைமை ஆசிரியர்களில் யாருமே நியமிக்கப்படவில்லை.
அதில், தலைமை ஆசிரியர்களின் பணிமூப்பு முன்னுரிமை பட்டியலை தவிர்த்தும், மாற்று கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த இளைய தலைமை ஆசிரியர் ஒருவர், பொறுப்பு டி.இ.ஓ.,வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது, அரசு விதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானது. அதுபோல், விருத்தாசலம், வடலுார் கல்வி மாவட்ட பொறுப்பு டி.இ.ஓ.,க்கள் நியமனத்திலும் விதிமீறல் நடந்துள்ளது. இதனால், தகுதி வாய்ந்த, அனுபவமிக்க மூத்த தலைமை ஆசிரியர்கள் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே, தமிழக அளவில் அரசு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீத பட்டியலில், கடலுார் மாவட்டம் பின்தங்கிய நிலை தொடர்கிறது. தற்போது, தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர்களை புறக்கணித்து, மாற்று நபர்களை பொறுப்பு டி.இ.ஓ.,வாக நியமிப்பதால், அவர்களுக்குள் மோதல் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால், மாணவர்களின் கல்வி நலன் பாதிப்பதுடன், தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருப்பதால், பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இது குறித்து மூத்த தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், &'மாநிலத்தில் கடலுார் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலை தொடர்கிறது. கல்வி மாவட்டங்களை கூடுதலாக்கியும், பொறுப்பு டி.இ.ஓ.,க்கள் நியமனத்தில் அரசின் விதிமுறை பின்பற்றப்படவில்லை. தகுதியான தலைமை ஆசிரியர்களை புறக்கணித்து, இளைய தலைமை ஆசிரியர்கள், மாற்று கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பதால், அவர்களுக்குள் மோதல் போக்கு தான் உருவாகும். இது மாணவர்களின் கல்வி நலனையும் பாதிக்கும். இதுபோன்ற நிலைக்கு ஆசிரியர் சங்கங்கள் தான் முக்கிய காரணமாகும்.
ஆசிரியர் சங்கங்கள், பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிகளிடம் இணக்கமாக செயல்பட்டு, பணி மாறுதல், டி.இ.ஓ., உள்ளிட்ட அலுவலர்கள் நியமனம் வரை தொடர்கிறது. ஆசிரியர் சங்கங்கள் நேரடியாக செயல்படுவதும், அவர்களுக்கு அரசியல் கட்சியினர் மறைமுக ஆதரவு தருவதும் வருத்தமளிக்கிறது.
எனவே, மாவட்ட அரசு பள்ளி மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர்களை, அவர்களின் பணிமூப்பு பட்டியல் அடிப்படையில் (பொறுப்பு) டி.இ.ஓ.,வாக நியமிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.