WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 2, 2019

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு ரத்து விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது ஜூலை 4-இல் விசாரணை.

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது ஜூலை 4-இல் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மார்ச் 7-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 30-இல் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் திங்கள்கிழமை ஆஜராகி, இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு முறையிட்டார். இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஜூலை 4-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.
பின்னணி: தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 பணியிடங்களுக்கு கடந்த 2017-இல் தேர்வு நடைபெற்றது. அதில், 1,33,568 பேர் கலந்து கொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்ட 2,011 பேரில் 196 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு விடைத்தாள் மதிப்பீட்டின் போது முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து சில தேர்வர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் ரத்து உத்தரவு சரியெனத் தீர்ப்பு அளித்தது. ஆனால், இதே விவகாரத்தை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது.
இதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்த உத்தரவு செல்லாது. முறைகேட்டில் ஈடுபட்ட 198 பேரின் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும். மேலும், தகுதியான நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என மார்ச் 7-இல் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.