WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, March 18, 2024

தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!

 நாடு முழுவதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பி.எம் ஸ்ரீ பள்ளிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எதிர்கால சந்ததியினரின் விடிவெள்ளியாக இந்த பள்ளிகள் இருக்கும் கல்வியாளர்கள் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சரி...இந்த பி.எம் ஸ்ரீ பள்ளிகள் என்றால் என்ன....! 

மத்திய கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளபடி, இந்தத் திட்டம் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் (PM Schools for Rising India) என்று அழைக்கப்பட்டு வருகிறது. இதன் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 14,500 பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கிய அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள காந்திநகரில் கடந்த ஜூன் மாதம் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்த ஒரு மாநாட்டின் போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்களுடன் இந்த திட்டம் குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது. அனைத்து யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுடன் கலந்தாலோசித்து இம்முயற்சி முன்னெடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அப்போது அறிவித்திருந்தார்.

மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் போன்ற அதிநவீன முன்மாதிரியான பள்ளிகள் இருக்கும்போது, ​​பி.எம். ஸ்ரீ தேசிய கல்விக் கொள்கை ஆய்வகங்களாக செயல்படும். இவை மாநில அரசுகளால் நடத்தப்படும்போது அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கான முக்கிய அம்சங்கள் என்ன? தேசிய கல்விக் கொள்கை பாடத்திட்டத்தின் அமைப்பு மற்றும் கற்பித்தல் பாணியை பல்வேறு நிலைகளாகப் பிரிக்கிறது - அடித்தளம், தயாரிப்பு, நடுத்தர மற்றும் இரண்டாம் நிலை என பிரிக்கிறது. அடிப்படை ஆண்டுகள் (முன்பள்ளி மற்றும் தரங்கள் I, II) விளையாட்டு அடிப்படையிலான கற்றலை உள்ளடக்கியத். ஆயத்த நிலையில் (III-V), சில முறையான வகுப்பறை கற்பித்தலுடன் ஒளி பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பாட ஆசிரியர்கள் நடுத்தர அளவில் (VI-VIII) அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். இரண்டாம் நிலை (IX-XII) கலை மற்றும் அறிவியல் அல்லது பிற துறைகளுக்கு இடையே கடினமான பிரிப்பு இல்லாமல் இயற்கையில் பலதரப்பட்டதாக அது அமைந்து இருக்கும்.
மத்திய நிதியுதவி திட்டம்: மத்திய அரசு மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் செயல்படுத்துவதற்கான செலவு பிரிக்கப்படுவதுதான் மத்திய நிதியுதவி திட்டம். உதாரணமாக, மதிய உணவு திட்டம் (பி.எம் போஷான்) அல்லது பி.எம் ஆவாஸ் யோஜனா ஆகியவை மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சல பிரதேசம், உத்தராகாண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் சட்டமன்றங்கள் இல்லாத யூனியன் பிரதேசங்களில், மத்திய அரசின் பங்களிப்பு 90 சதவீதமாக உயரும். தற்போது கொண்டு வரப்படும் பி.எம். ஸ்ரீ பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா அல்லது ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளிலிருந்து எவ்வாறு வேறுபடும்?

கேந்திரிய வித்யாலயாக்கள் அல்லது ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் முற்றிலும் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. இந்த பள்ளிகள் மத்தியத் துறைத் திட்டங்களின் கீழ் மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படுகின்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி கற்பித்தலை கேந்திரிய வித்யாலயாக்கள் பெரிதும் பூர்த்தி செய்யும் அதே வேளையில், நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள திறமையான மாணவர்களை வளர்ப்பதற்காக ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் அமைக்கப்பட்டன. இதற்கு மாறாக, பி.எம் ஸ்ரீ பள்ளிகள், தற்போதுள்ள மத்திய, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும். இதன் அடிப்படையில் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், மாநில அரசு பள்ளிகள் அல்லது நகராட்சி, மாநகராட்சிகளால் நடத்தப்படும் பள்ளிகளாக இருக்கலாம். அந்த பள்ளிகளை பி.எம் ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு மேம்படுத்தும். பி.எம் ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் எங்கே அமைக்கப்படும்? பி.எம் ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் திட்டதுக்காக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் பட்டியலை இதுவரை மத்திய அரசு வெளியிடவில்லை. இருப்பினும் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் தங்கள் அருகில் உள்ள மற்ற பள்ளிகளுக்கும் வழிகாட்டிகளை வழங்கும் என்று அறிவித்துள்ளது. இந்த பள்ளிகள், ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு உபகரணங்கள், கலை அறை போன்ற நவீன உள்கட்டமைப்புகளுடன் அமைக்கப்பட்டு இருக்கும். நீர் பாதுகாப்பு, கழிவு மறுசுழற்சி, மின்சார உள்கட்டமைப்பு மற்றும் இயற்கை வாழ்க்கை முறையை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கும் பசுமை பள்ளிகளாகவும் அதிநவீன முறையில் உருவாக்கப்படும். நாடு முழுவதும்.... பி.எம். ஸ்கூல்ஸ் ஆஃப் ரைசிங் இந்தியா என்பதன் சுருக்கமே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்தியா முழுவதிலும் 14,500 பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதே இத்திட்டத்தின் அடிப்படையான நோக்கமாகும். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இப்பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றி, அப்பள்ளிகள் அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகளை வழிநடத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 21-ம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையிலும், எதிர்கால மாணவச் சந்ததியினரை சிறந்த முறையில் வார்த்தெடுக்க வேண்டும் என்ற வகையிலும் இந்தப் பள்ளிகள் இருக்கும் என புதிய கல்விக் கொள்கை-2020-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம் ஸ்ரீ (PM SHRI) பள்ளிகளில் உயர்தர கல்வி, பாதுகாப்பான சூழல், பரவலான கற்றல் அனுபவங்கள் மாணவச் செல்வங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம். இந்தப் பள்ளிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிகாரிகள் செய்யவுள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பயணடைவார்கள் என, கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்திருந்தது. பி.எம் ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் அமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவரை ஒடிசா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் மத்திய அரசுடன் கையெழுத்திடவில்லை. அதிரவைத்த மத்திய அரசு: பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் சேராத மாநில அரசுகளுக்கு கல்வி உதவி நிறுத்தப்படும் என மத்திய அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பி.எம் ஸ்ரீ பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு ஆர்வம் காட்டியிருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், PM SHRI பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. அடுத்த கல்வியாண்டு 2024-25 தொடங்குவதற்கு முன், புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநில அரசால் கையெழுத்திடப்படும். தமிழக அரசுக்கும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துக்கும் இடையேயான இந்த கூட்டு வலுவான மத்திய-மாநில உறவுகளை குறிக்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதால், இந்த முயற்சியை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது. முதலில் பி.எம் ஸ்ரீ (PM SHRI) பள்ளிகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தற்போது இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பள்ளிகளில் நல்ல உள்கட்டமைப்பு மற்றும் கற்றலுக்கு உகந்த ஆதாரங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் என்பதால் இதற்கு அதிக வரவேற்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். தேசியக் கல்விக் கொள்கை 2020-ன்படி சமமான, உள்ளடக்கிய மற்றும் பன்மை சமுதாயத்தைக் கட்டியெழுப்ப மாணவர்களை ஈடுபாடும், உற்பத்தித்திறனும், பங்களிப்பும் உள்ள குடிமக்களாக மாற்றும் வகையில் இது அவர்களை வளர்க்கும் என்றும் அவர்கல் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தின் நேரடிப் பயனாளிகளாக இருப்பார்கள் என்பதால் இந்த திட்டத்துக்கு பரவலான ஆதரவு கிடைத்து வருகிறது. இத்திட்டம் பள்ளிக் கல்வியின் தரத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய புரிதலை ஊக்குவிக்கும் மற்றும் கொள்கை, நடைமுறை மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றைத் தெரிவிக்கும். இந்தப் பள்ளிகளிலிருந்து கற்றல் நாட்டிலுள்ள மற்ற பள்ளிகளுக்கு அளவிடப்படும். இத்திட்டம் 2022-23 முதல் 2026-27 வரையிலான 5 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிதியுதவி பிரச்சினை: கல்விக்கான நிதியுதவியை மத்திய அரசு நிறுத்தியதால், பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணைய தயார் என, தமிழக அரசு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. நிலுவையில் உள்ள நிதியுதவி நிலுவையை வழங்கும்படி, மத்திய கல்வி அமைச்சருக்கு, தமிழக தலைமை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.நாடு முழுதும் தரமான கல்வியை வழங்கும் வகையில், மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. இதன்படி, மத்திய அரசு சார்பில், பி.எம்.ஸ்ரீ., என்ற பிரதம மந்திரியின் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் திட்டம், 2022ல் அமலானது. இந்த திட்டத்தில் சேர, ஒவ்வொரு மாநில அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி, மத்திய கல்வித்துறை வலியுறுத்தியது. அதனால், பெரும்பாலான மாநிலங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டு, பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணைந்தன. நாடு முழுதும், 14,500 அரசு பள்ளிகள் இந்த திட்டத்தில் இணைந்து, நவீன கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகளை பெற்றுள்ளன. அவற்றுக்கு, மத்திய அரசின் சார்பில் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், டெல்லி, கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்கள் மட்டும், அரசியல் காரணங்களால் இத்திட்டத்தில் இணையவில்லை. இதையடுத்து, இந்த மாநிலங்களுக்கான பள்ளிக்கல்வி நிதியுதவியை, மத்திய அரசு அதிரடியாக நிறுத்தியது. அதாவது, மத்திய அரசின் சமக்ர சிக் ஷா ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் வரவேண்டிய, 1,138 கோடி ரூபாய், தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு வரவில்லை. அதிலும், நடப்பு நிதியாண்டு இந்த மாதத்துடன் முடிவதால்,தமிழக அரசுக்கு வரவேண்டிய நிதியுதவி இனி கிடைக்காது என்ற சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பாக பத்திரிகைகளில் விரிவான செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், செயலர் குமரகுருபரன், சமக்ர சிக் ஷா திட்ட மாநில இயக்குனர் ஆகியோர், மார்ச் 8ம் தேதி டெல்லி சென்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, நிறுத்தப்பட்ட நிதியுதவியை வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். அப்போது, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் இணையாவிட்டால், நிதியுதவி கிடையாது என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியாக கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து, தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மத்திய பள்ளிக்கல்வி செயலர் சஞ்சய் குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்கான, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அந்த வரிசையில், மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள, தமிழக அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது.இதற்காக, தமிழக பள்ளிக்கல்வி செயலர் தலைமையில், மாநில அளவிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, அடுத்த கல்வி ஆண்டு துவங்கும் முன், பி.எம்.ஸ்ரீ., திட்டம் தொடர்பாக, மத்திய அரசுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும். எனவே, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியுதவிக்கான, மூன்றாவது மற்றும் நான்காவது தவணைகளை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.