பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் 19,922 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.79 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான இணைய வழி கலந்தாய்வு கடந்த ஜூலை 22-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக விளையாட்டு வீரர் உட்பட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 836 இடங்கள் நிரம்பின. இதையடுத்து பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 28-ல் தொடங்கி நேற்று காலையுடன் முடிவடைந்தது.
இதில் பங்கேற்க 26,654 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 23,949 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டு விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில் 18,655 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இதேபோல், தொழிற்கல்வி பிரிவினருக்கான கலந்தாய்வில் 1,267 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அரசுப் பள்ளி மாணவருக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 1,128 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த முதல் சுற்றின் முடிவில் 19,922 இடங்கள் வரை நிரம்பியுள்ளன.
இதையடுத்து 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. அதன்படி ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கலந்தாய்வில் பங்கேற்க 77,947 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 13-ம் தேதி காலையில் வெளியிடப்படும். அதற்கு மறுநாள் (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். மேலும், இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
இதற்கிடையே கலந்தாய்வின்போது விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதிசெய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மாணவர்கள் செயல்பட வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/ எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த கலந்தாய்வு செப்டம்பர் 3-ம் தேதியுடன் நிறைவு பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.