தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாததால் புதிய தேர்வுக் கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்? என்று பிஎட் பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ள பள்ளிகளில் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (சிடெட்) தேர்ச்சி கட்டாயம் ஆகும். சிடெட் தேர்வை மத்திய அரசு சார்பில் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. மாநில அளவிலான டெட் தேர்வை அந்தந்த மாநிலத்தில் ஏதேனும் ஒரு தேர்வு அமைப்பு நடத்தும். அதன் படி, தமிழகத்தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்துகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என டிஆர்பி 2024 வருடாந்திர தேர்வு அட்டவணையில் தெரிவித்திருந்தது. ஆனால் 2024-ம் ஆண்டு கடந்து புத்தாண்டு பிறந்தும் இன்னும் டெட் தேர்வுக்கான அறிவிப்புகூட வெளியிடப்படவில்லை.
இதனால் பிஎட் பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்த ஆசிரியர்களும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர். காரணம், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அரசு பள்ளிகளில் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் எப்படியும் ஆசிரியர் பணியில் சேர்ந்துவிடலாம் என்பதுதான்.
தற்போது அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்பதால் டெட் தேர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பணியில் உள்ள ஆசிரியர்களும் டிஆர்பி-யின் நடவடிக்கையால் மனச்சோர்வு அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "டெட்தேர்வு நடத்துவதற்கு அரசின் அனுமதி கிடைத்ததும் உடனடியாக அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு நடத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.