கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் தொடர்வதால், நிரந்தர பேராசிரியர் பணி நியமனம் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு உயர் கல்வி துறையின் கல்லுாரி கல்வி இயக்ககத்தின் கீழ், 175 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
இதில் மொத்தம், 15,000 பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. தற்போது, 4,711 பேர், நிரந்தர பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். மீதம், 10,289 இடங்கள் காலியாக உள்ளன.
இதில், 25,000 ரூபாய் மாத தொகுப்பூதியத்தில், 7,360 பேர், கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்போது மண்டல வாரியாக, 560 கவுரவ விரிவுரையாளர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பட்டியல், 1ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், 300 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே, அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 4,000 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என, கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. பின்னர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2024 மார்ச் 14ம் தேதி, உதவி பேராசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான போட்டி தேர்வு, 2024 ஆகஸ்ட் 4ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்களும் பெறப்பட்டன. யு.ஜி.சி., 'நெட்' தேர்ச்சி, பி.எச்டி., தகுதிகளுடன் உள்ள பட்டதாரிகள், இந்த அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சியுடன் விண்ணப்பித்தனர். ஆனால், தொடங்கிய வேகத்திலேயே அந்த நடவடிக்கை நின்று போனது.
நிர்வாக காரணம் என கூறி, உதவி பேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வு தள்ளிப் போடப்பட்டது. வழக்குகள் உட்பட பல காரணங்களால், தேர்வு நடத்துவதில் காலதாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்களை அரசு நியமனம் செய்து வருவது, பட்டதாரிகள், பேராசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கவுரவ விரிவுரையாளர் நியமனத்தால், தங்களின் அரசு பணி கனவு கானல் நீராகி வருவதாக, அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதிய பாடப்பிரிவுகள்
துவங்கி என்ன பயன்?
சேலம், திருப்பூர், சாத்தான்குளம், தொண்டாமுத்துார், சென்னை ஆர்.கே.நகர் ஆகிய அரசு கல்லுாரிகளில், புதிதாக எம்.பி.ஏ., பாடங்கள், கடந்த 2023ம் ஆண்டு துவங்கப்பட்டன. அதேபோல், திருப்பத்துார், திருச்சி, ஊட்டி, சென்னை ராணி மேரி, வால்பாறை ஆகிய ஐந்து கல்லுாரிகளில் புதிதாக எம்.சி.ஏ., பாடங்கள் துவங்கப்பட்டன. நல்ல பாடப்பிரிவுகள் துவங்கிய பின்னும், அதற்கான பேராசிரியர்கள் ஒருவர் கூட, இரண்டு ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. கல்லுாரியில் பணியாற்றும் மற்ற பேராசிரியர்களே, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., பாடங்களை நடத்தி வருகின்றனர். - சுரேஷ், பொதுச்செயலர், அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.