புதுடில்லி;
குரூப் - 1 தேர்வு மூலம், பணி நியமனம் பெற்ற, 83 அதிகாரிகளை பணி நீக்கம்
செய்யும்படி, சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை, வரும், 17ம் தேதி நடைபெறும் என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சப்-கலெக்டர், டி.எஸ்.பி., மற்றும் மாவட்ட பத்திரப்பதிவு அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு, 2004ல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வில், வெற்றி பெற்ற, 83 பேர், சப்-கலெக்டர் உள்ளிட்ட பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.
இந்த குரூப்-1 தேர்வில், முறைகேடுகள் நடந்ததாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற, 83 பேரின் தேர்வை ரத்து செய்ததுடன், முறைகேடு நடந்ததையும் உறுதி செய்தது.
இதையடுத்து, தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேர்வை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, கடந்த மாதம், 30ம் தேதி உறுதி செய்தனர்.
இந்நிலையில், கடந்த, 30ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், திருத்தம் கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பிலும், பாதிக்கப்பட்ட, 83 பேர் சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில், புதிதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட, 83 பேர் சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த மாதம், 30ம் தேதி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், 10 ஆண்டுகள் பணியாற்றிய, நாங்கள் வேலை இழப்பதோடு, அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை எழுதுவதற்கான, வயது வரம்பை கடந்து விட்டதால், புதிதாக தேர்வு எழுத முடியாத சூழ்நிலையும் உருவாகி உள்ளது. எங்களுடன் தேர்வு எழுதிய, மற்றவர்களின் விடைத்தாளுடன், எங்களின் விடைத்தாள்களையும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமோ அல்லது, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் நிபுணர் குழுவோ, மறு மதிப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;
குறிப்பிட்ட தேர்வை எழுதிய, 747 பேரில், 746 பேர் விதி மீறல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஒட்டு மொத்த தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். தேர்வாணைய விதிமுறைகளில், கேள்விகளுக்கான விடைகளை எழுத, பென்சில் பயன்படுத்தக்கூடாது என, தெரிவிக்கப்படவில்லை. எனவே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 83 பேர் தவிர, மீதமுள்ள விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்களை, தேர்வாணையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டுமா என்பதை, நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும். பென்சில் பயன்படுத்தியது தான், விடைத்தாள்களை தள்ளுபடி செய்ததற்கான காரணமா என்பதையும் விளக்க வேண்டும்.இவ்வாறு, தேர்வாணைய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.