WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 2, 2014

இந்தியாவை பயமுறுத்தும் எல்-நினோ: கடும் வறட்சி ஏற்படும் அபாயம்

புதுடில்லி:
எல்-நினோ  என்றழைக்கப்படும் வெப்ப நீரோட்டத்தால் இந்த ஆண்டு இந்தியாவின் பருவமழை குறையும் என்றும், அதனால், கடும் வறட்சி ஏற்படலாம் என்றும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பசிபிக் கடலின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் தான், இந்திய வானிலை மாற்றங்களை தீர்மானிக்கிறது. இந்த வெப்ப நிலை சீராக இருந்தால், இந்தியாவின் வானிலை வழக்கப்படி இருக்கும். இல்லாவிட்டால் மாறுதல் ஏற்பட்டு, கடும் வறட்சியோ, அல்லது அதிக மழை பொழிவோ ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் மேற்கு பசிபிக் கடலோர வெப்ப அளவு மற்றும் கடல் அழுத்தத்தை கணக்கிட்டு, இந்தியாவின் பருவநிலை கணக்கிடப்படுகிறது.
தள்ளிப்போகும் பருவமழை:
இந்த ஆண்டு, வழக்கத்திற்கு மாறாக எல்-நினோ எனப்படும் வெப்ப நீரோட்டத்தின் வெப்ப அளவு அதிகரித்துள்ளது. இதற்கு புவி வெப்பம் அதிகரித்துள்ளதே காரணம் என கூறப்படுகிறது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை ஜூன் துவங்கி, ஆகஸ்ட் வரை நீடிக்கும். இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு மழைப் பொழிவு இல்லை. வழக்கமாக, வட மாநிலங்களில் ஜுன் கடைசி வாரத்தில் மழை துவங்கும். ஆனால், இந்த ஆண்டு, ஜூலை முதல் வாரத்திற்கு இது தள்ளிப் போயுள்ளது.
ஆஸி., எச்சரிக்கை:
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான எல்-நினோவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் பருவமழை பெய்ய வேண்டிய மாதங்களில், எல்-நினோவின் நிலைப்பாடு அச்சமூட்டுவதாக உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 'வளி மண்டலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் எல்-நினோ வழக்கத்திற்கு முன்னதாகவே உருவாகலாம். இதனால், எல்-நினோ நீண்ட நாட்கள் இருந்து, பருவநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதுபோன்ற மாற்றங்கள் ஒவ்வொரு மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதுபோன்ற நேரங்களில், இந்தியாவின் பருவமழை பொழிவு குறையும்,' என்று கூறப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய வானிலை ஆய்வு மையமும், இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை பொழிவு குறையும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.