WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 6, 2014

இன்ஜினியரிங் படிப்பு ஆர்வம் குறைந்தது: பொறியியல் கல்லூரிகளில் 1.2 லட்சம் இடங்கள் காலி

இன்ஜினியரிங் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் சீட்டுகள் காலியாக உள்ளன. இந்நிலையில் துணை கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில், இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சத்து 11 ஆயிரத்து 589 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு 1 லட்சத்து 73,687 பேர் விண்ணப்பித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 7ம் தேதி பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சலிங் துவங்கியது. நாள்தோறும் சராசரியாக 4 ஆயிரத்து 400 மாணவ, மாணவிகள் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்டனர்.

ஜூலை 7ம் தேதி தொடங்கி கடந்த 4ம் தேதி வரை 28 நாள்கள் நடைபெற்ற கவுன்சலிங்கில், 1 லட்சத்து 64 ஆயிரத்து 929 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.
இதில், அனைத்து பிரிவுகளும் சேர்த்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 79 மாணவ, மாணவிகள் இடங்களை தேர்வு செய்தனர். 59 ஆயிரத்து 300 மாணவர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்கவில்லை. 496 மாணவர்கள் இடம் வேண்டாம் என கூறி சென்றுள்ளனர்.

இந்தாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையை பொறுத்தளவில், பல்வேறு பாடப்பிரிவுகளில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரத்து 510 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இதனால், பல இன்ஜினியரிங் கல்லூரிகள் நிதி சுமையின் காரணமாக இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இன்ஜினியரிங் அட்மிஷனில் 80 ஆயிரம் சீட்கள் நிரம்பவில்லை. இந்த வருடம் இது மேலும் 20 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் போதிய ஆர்வம் காட்டாததே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று கவுன்சலிங் நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான மாணவர்கள் நேற்று அண்ணா பல்கலைக் கழகத்தில் நேரில் பதிவு செய்தனர். பொதுப் பிரிவில் கலந்துகொள்ள தவறிய மாணவர்களும், இந்த துணை கவுன்சலிங்கில் கலந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுப் பிரிவு கவுன்சலிங்கில் அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களுக்கு நாளை சிறப்பு கவுன்சலிங் நடத்தப்படுகிறது.

இன்று துணை கவுன்சலிங் தொடக்கம்

தமிழ்வழி படிப்புகள்

பொறியியல் தமிழ்வழி படிப்பை பொறுத்தளவில் சிவில் பிரிவில் 659 இடங்கள் உள்ளன. இதில் 319 இடங்கள் நிரம்பியுள்ளன. ஆண்கள் 157, பெண்கள் 162. இவற்றில் முதல்தலைமுறையினர் 187 பேர். மெக்கானிக்கல் பிரிவில் 718 இடங்கள் உள்ளன. இதில், 261 இடங்கள் நிரம்பியுள்ளது. ஆண்கள் 245, பெண்கள் 16. இவற்றில் முதல்தலைமுறையினர் 145 பேர்.

மெக்கானிக்கல் பிரிவுக்கு மவுசு

இந்தாண்டு நடைபெற்ற பொறியியல் மாணவர் சேர்க்கையில் மெக்கானிக்கல் பிரிவை அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். அதன்படி, நடந்து முடிந்த கவுன்சலிங்கில் மெக்கானிக்கல் பிரிவு& 26 ஆயிரத்து 770 மாணவர்களும், இசிஇ பிரிவு& 19,012, சிவில் பிரிவு& 17,010, கம்ப்யூட்டர் சயின்ஸ்& 13,987, டிரிபிள்இ& 11,662 மாணவர்களும் தேர்வு செய்துள்ளனர்.

நிரம்பிய இடங்கள்

பொறியியல் மாணவர் சேர்க்கையில் நிரம்பிய இடங்களின் விவரம் (பொதுபிரிவு): அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லூரிகள்& 7,184. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்& 5,907. சுயநிதி பொறியியல் கல்லூரிகள்& 92 ஆயிரத்து 42 இடங்கள் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 133 இடங்கள் நிரம்பியுள்ளன.

காலியாக இருக்கும் இடங்கள்

பொறியியல் மாணவர் சேர்க்கையில் காலியாக இருக்கும் இடங்களின் விவரம் (பொதுபிரிவு): அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லூரிகள்& 802. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்& 2. சுயநிதி பொறியியல் கல்லூரிகள்& 98 ஆயிரத்து 134 இடங்கள்.www.kalvikkuyil.blogspot.com

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.