WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 24, 2017

பிளஸ் 1 வகுப்புக்கும் இனி பொது தேர்வு! : தமிழ், ஆங்கில பாடங்களுக்கு 'இன்டர்னல் மார்க்'.

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில் மாற்றம் செய்ததற்கான, அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டது. இதில், மொழி பாடங்களுக்கு முதல் முறையாக, 'இன்டர்னல் மார்க்' எனப்படும், அகமதிப்பீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டான, 2017 - 18 முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகமாகிறது. இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வித்துறை செயலர், உதயச்சந்திரன் பிறப்பித்தார். அதை, துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

  • தமிழகத்தில், 1978 - 79ல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் துவங்கப்பட்டு, பிளஸ் 2வுக்கு மட்டும் மாநில பொது தேர்வும், பிளஸ் 1க்கு மாவட்ட தேர்வும் நடத்தப்பட்டது.

  • பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு சம அளவில் பாடங்கள் பிரிக்கப்பட்டன. பிளஸ் 2வுக்கு மட்டும் பொது தேர்வு நடத்தியதால், தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 பாடங்களை நடத்தாமல், இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடங்களே நடத்தப்பட்டன.

  • அதனால், உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள், அங்கு அடிப்படையாக இருக்கும், பிளஸ் 1 பாடங்கள் தெரியாமல், பருவத் தேர்வில் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. அதிகபட்ச மதிப்பெண் பெறுவோரும், உயர் கல்வியில் தடுமாறும் நிலை ஏற்பட்டதை, அண்ணா பல்கலை போன்ற கல்வி நிறுவனங்களும், கல்வியாளர்களும், அரசுக்கு எடுத்துரைத்தனர்.

  • 'நீட், ஜே.இ.இ.,' போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள, தமிழக மாணவர்களுக்கு பயனுள்ள தேர்வு முறை தேவை என்பதை, அரசும் உணர்ந்தது. இதையடுத்து, பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில், தேர்வு சீர்திருத்த குழு அமைக்கப்பட்டு, ஆய்வு நடத்தப்பட்டது. ஆந்திராவில், 1979 முதல், கேரளாவில், 2008 முதல், பிளஸ் 1க்கும் பொது தேர்வு நடத்தப்படுகிறது.
  • அதனடிப்படையில் நடந்த ஆய்வுக்கு பின், மே, 11ல், உயர்மட்டக்குழு கூடி, 2017 - 18 கல்வியாண்டு முதல், தமிழகத்திலும் பிளஸ் 1க்கு, பொது தேர்வு நடத்த முடிவானது.

* எனவே, வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு பொது தேர்வு அமலாகிறது. இதில், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, தலா, 600 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, இரண்டு ஆண்டு இறுதியில், மொத்தம், 1,200 மதிப்பெண்களுக்கு, ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண், 35 ஆக நிர்ணயிக்கப்படுகிறது

* ஒவ்வொரு பாடத்திற்கும், இனி இரண்டரை மணி நேரம் தேர்வு நடக்கும். தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி பாடங்களுக்கு, ஒவ்வொரு தாளுக்கும், முதல்முறையாக, 10 மதிப்பெண், 'இன்டர்னல்' எனப்படும் அகமதிப்பீடாக, ஆசிரியரால் வழங்கப்படும்; 90 மதிப்பெண்ணுக்கு, எழுத்து தேர்வு நடத்தப்படும்

* செய்முறை தேர்வு உள்ள பாடங்களுக்கு, 10 மதிப்பெண் அகமதிப்பீடு, 20 மதிப்பெண்ணுக்கு செய்முறை தேர்வு மற்றும், 70 மதிப்பெண்ணுக்கு, எழுத்து தேர்வாக நடத்தப்படும்

* பிளஸ் 1ல், ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2 வகுப்பில் படிக்கலாம். ஆனால், உடனடி சிறப்பு தேர்விலோ, பின்னரோ, பிளஸ் 1ல் தோல்வியான பாடங்களை, 'அரியர்ஸ்' தேர்வாக எழுதலாம்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.