WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 21, 2023

அரசு ஊழியர்மற்றும்ஆசிரியர்களின் கோரிக்கைகள்: கைவிட்ட பிடிஆர், திரும்பிப் பார்ப்பாரா ஸ்டாலின்?

 நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டப்பேரவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் இது தொடர்பாக நேற்று (மார்ச் 20) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தொடர்பான தேர்தல் கால வாக்குறுதிகளான புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி ரூ.3 லட்சம் என்பது ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் ஆகியவை குறித்து தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் எந்தவித அறிவிப்பும்

வெளியிடப்படாதது பணியாளர்கள் மத்தியிலே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அகவிலைப்படி எங்கே? சரண்டர் பணம் எங்கே?

அதோடு மட்டுமல்லாமல், 2021ல் இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், வழங்கப்பட்ட மூன்று தவணை அகவிலைப்படிகளை ஆறு மாதம் காலம் தாழ்த்தி, நிலுவைத் தொகையானது மறுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு வழங்கும் அகவிலைப்படியினை அதே தேதியில் மாற்றமின்றி நிலுவைத் தொகையுடன் வழங்குவதற்கான கொள்கை முடிவு அறிவிக்கப்படவில்லை.

ஆண்டுக்கு ஒருமுறை 15 நாட்கள் ஈட்டிய விடுப்பினை சரண் செய்வது என்பது காலவரையின்றி
முடக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு வழங்கப்படாதது ஏன்?

2023 ஆம் ஆண்டில் 2000க்கும் குறைவான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இலக்கானது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் பணிமூப்பு குறித்தான உச்ச நீதிமன்ற வழக்கு காரணமாக, தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் நிலையில் ஓராண்டிற்கு மேலாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதற்கான அரசின் நிலைப்பாடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

தலைமைச் செயலக இட நெருக்கடி!

தலைமைச் செயலகத்தைப் பொறுத்தவரையில், கடும் இட நெருக்கடி உள்ள நிலையில், அதைக் களைவதற்கான வழிமுறைகள் குறித்த எந்த நிலைப்பாடும் வெளியிடப்படவில்லை.

பதவி உயர்வுகள் எந்தவித தாமதமுமின்றி உரிய தேதியில் வழங்கப்படும் என்ற அரசின் கொள்கை அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

வருவாய் பற்றாக்குறையை போக்க இதுவா வழி?


மேலும், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்-ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியினை ஆறு மாதம் காலம்தாழ்த்தி-நிலுவைத் தொகையினை மறுத்து, அதோடு 15 நாட்கள் சரண் விடுப்பு சலுகையினைப் பறித்து அதன் மூலம் ஈட்டிய வருவாயை கொண்டு, வருவாய் பற்றாக்குறை குறைந்து விட்டது என்று பெருமை கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது?.

சமூக நீதிக்கு எதிரான பட்ஜெட்!

4 லட்சத்திற்கும் மேலாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல், படித்து வீட்டு அரசின் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவினை இருளாக்கி, அதன் மூலம் மிச்சப்படுத்தும் வருவாயைக் கொண்டு வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது என்பது 69 விழுக்காடு சமூக நீதிக்கு எதிரானதல்லவா?

பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியாகுமா?



தமிழக முதலமைச்சர் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் வாழ்வாதார தேர்தல் கால வாக்குறுதிகள் குறித்து நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும்” என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.