WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, February 2, 2026

பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதிய 2.27 லட்சம் பேர் பெயில்!.

 

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித்தேர்வு எழுதிய 3.32 லட்சம் பேரில் , 2.27 லட்சம் பேர் 'பெயில்' ஆகியுள்ளனர்; அதே போல், இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும், 50 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித்தேர்வு எனும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழகத்தில், 'டெட்' தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த சூழலில், இந்த கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்துவதற்கு முன், பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், 'டெட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்., 1ல் உத்தரவிட்டது.

அதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

அரசாணை

இதனால், தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த ஆண்டு நவ., 15, 16ம் தேதிகளில், 'டெட்' தேர்வு நடத்தப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான இடைநிலை ஆசிரியர் பணிக்கான, 'டெட்' முதல் தாள் தேர்வை, 92,417 பேர் எழுதினர்.

மேலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாள் தேர்வை, 3,31,900 பேர் எழுதினர். இரண்டையும் சேர்த்து, 4,24,317 பேர் எழுதினர்.

மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளில், தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்ணாக, பொதுப் பிரிவினருக்கு 90. பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 82.5 மதிப்பெண்கள்; எஸ்.டி., பழங்குடியினருக்கு 60 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில், 'டெட்' தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களில், 5 சதவீதம் குறைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த ஜன., 28ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகள்

அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு 75 மதிப்பெண்கள்; எஸ்.சி., எஸ்.டி., மற்றும் அருந்ததியினர் பிரிவினருக்கு, 60 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த அரசாணை, கடந்த மாதம் தான் வெளியிடப்பட்டது. ஆனாலும், கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட 'டெட்' தேர்வுகளுக்கும் இது பொருந்தும் என, தமிழக அரசு அறிவித்தது. அதை அமல்படுத்தும் விதமாக, கடந்த 28ம் தேதி பிறப்பித்த அரசாணை அடிப்படையில், 'டெட்' தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.

அதன்படி, 'டெட்' முதல் தாள் தேர்வில், 45,469 பேர் தேர்ச்சி பெற்றனர்; 46,948 பேர் தோல்வி அடைந்தனர். அதாவது, தேர்வு எழுதியவர்களில், 49.2 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

'டெட்' இரண்டாம் தாள் தேர்வில், 1,04,604 பேர் தேர்ச்சி பெற்றனர்; 2,27,295 பேர் தோல்வியடைந்தனர். ஒருவரது தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. தேர்வு எழுதியவர்களில், 31.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 69 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இதற்கிடையே, 'டெட்' தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், அதற்கான தகுதிச் சான்றிதழ்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின், www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில், நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் தேர்ச்சி

கடந்த 2019ம் ஆண்டு நடந்த, 'டெட்' முதல் தாள் தேர்வை, 1,62,316 பேர் எழுதினர். அவர்களில் வெறும், 551 பேர் அதாவது, 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இரண்டாம் தாள் தேர்வில், பங்கேற்ற 3,79,735 பேரில் வெறும், 316 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் வெறும், 0.08 மட்டுமே.

கடந்த 2022ம் ஆண்டு நடந்த, 'டெட்' முதல் தாள் தேர்வை, 1,53,533 பேர் எழுதினர். அதில், 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 14.03. இரண்டாம் தாள் தேர்வை, 2,54,224 பேர் எழுதினர். அதில், 15,430 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் , 6.07. கடந்த தேர்வுகளை காட்டிலும், இந்த 'டெட்' தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.