WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 3, 2023

அரசு பள்ளி நேரம் மாற்றம் அவசியம்.



தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, 37 ஆயிரத்து 554. தற்போது, 52 லட்சத்து 75 ஆயிரத்து 203 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். வகுப்புகளை கையாள 2 லட்சத்து 25 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.




ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கான ஊதியம், நலத்திட்ட பொருட்கள் விநியோகம், பள்ளி கட்டமைப்பு வசதி, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் உட்பட செலவினங்களுக்கு மாநில பட்ஜெட்டில் ஆண்டுதோறும், 40 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்படுகிறது.



கல்வி, மருத்துவம் ஆகியவை சேவை துறைகளாக இருப்பதால் அரசுக்கு வருமானம் கிடைக்காது. ஆனால், இத்துறைகள் வளர்ச்சி பெற்றால் தான் மாநிலத்தின் வளர்ச்சி குறியீடு உயரும். பள்ளிக்கல்வி, உயர்கல்வி நிறைவு செய்தோர் விகிதத்தில், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.


தேசிய சராசரி கல்வி வளர்ச்சியை ஒப்பிடும் போதும், தமிழகத்தின் கல்வி வளர்ச்சி குறியீடு அதிகம் தான். ஆனால், இன்னும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அடித்தளமில்லாத கட்டடமாக தான் இருக்கிறது. இதற்கு காரணம், கள நிலவரம் தெரியாமல் திட்டங்கள் வகுப்பதும் அதற்கு நிதி ஒதுக்குவதும் தான். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு திட்டம் வகுத்து செயல்படுத்தி, அதன் பலன்களை அனுபவிக்க தொடங்கும் போது வேறு திட்டம் அறிவிக்கப்படுகிறது.



பள்ளிக்கல்வி பாடத்திட்டம்



சிறந்த பாடத்திட்டம், மாணவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தி, உலகளாவிய அறிவுசார் போட்டிகளில் பங்கெடுக்க வைக்கும். கடந்த 2018ல் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டது.



போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டன. ஆனால், இப்பாடங்களை வகுப்பறையில் கையாளும் போது ஏற்படும் சிக்கல்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்து சில மாற்றங்களை புகுத்தியிருக்க வேண்டும். உயர்நிலை வகுப்புகளுக்கு அதிக பாடத்திட்ட சுமையால், பல மாணவர்கள் பாடங்களை முழுமையாக படிக்காமலே தேர்வை எதிர்கொள்கின்றனர்.



ஒதுக்கப்பட்ட பாடவேளைக்குள் சிலபஸ் முடிக்க முடிவதில்லை. மாலை நேர வகுப்பு நடத்தி பாடங்கள் முடித்து, கல்வியில் பின்தங்கிய மாணவர்களையும் வழிநடத்தி, பொதுத்தேர்வில் ரிசல்ட் காண்பிப்பது என்பது, சாதாரண விஷயமல்ல.



எண்ணும் எழுத்தும் சிலபஸ்



இது ஒருபுறமிருக்க, தொடக்க கல்வியில், எண்ணும் எழுத்தும் சிலபஸ், கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு, அதிக பாடத்திட்ட அழுத்தம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தொடக்க வகுப்புகளில், பாடத்திட்ட கருத்துகளை மேலும் செறிவூட்ட வேண்டுமென ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.



எண்களையும், எழுத்துகளையும் மட்டுமே, ஐந்தாம் வகுப்பு வரை அறிமுகம் செய்யும் வகையில், மிக எளிமையாக பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் வகுப்பு வரை எழுத்துப்பயிற்சி மிக குறைவு. ஐந்தாம் வகுப்பு வரை, மிக எளிய பாடங்களை படித்து வரும் குழந்தையால், ஆறாம் வகுப்பில் இருந்து, அதிக பாடங்களை படிக்க முடியுமா என்பதே கேள்வியாக முன் நிற்கிறது. ஒவ்வொரு வகுப்பிலும் பாடங்கள் அடுத்த வகுப்புக்கான தொடர்ச்சியாக அமைத்திருக்க வேண்டும்.



ஆசிரியர் காலியிடம்



ஆறு முதல் பிளஸ் 2 வரை அதிக பாடங்கள் கொண்ட சிலபஸ் உருவாக்கிய கல்வித்துறை, அதை கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமித்திருக்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் மட்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் நியமனம் இல்லை. இக்கால கட்டங்களில், பணி ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களின் இடங்கள் தற்போது வரை காலியாகவே உள்ளன.



ஆசிரியர்களை நியமித்தால், சம்பளம் வழங்க நிதியில்லை என்பது போன்ற காரணங்கள் ஏற்க கூடியதாக இல்லை. கொரோனாவுக்கு பின் ஆசிரியர்களுக்கு, பல்வேறு சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உச்சகட்டமாக, ஆசிரியர்கள் என்ற அச்சாணியே இல்லாமல், தொடக்க கல்வித்துறை என்ற தேரை இழுக்கின்றனர். இதன் விளைவால், கல்வித்தரம் அதலபாதாளத்திற்கு தான் செல்லும்.



தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, 37 ஆயிரத்து 554. தற்போது, 52 லட்சத்து 75 ஆயிரத்து 203 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். வகுப்புகளை கையாள 2 லட்சத்து 25 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அதிகரிக்கும் பணிச்சுமை



புதிய ஆசிரியர் நியமனம் இல்லாமல், சராசரியாக இருவர் அல்லது மூவரின் வேலையை ஒரு ஆசிரியரே மேற்கொள்ளும் நிலை நீடிக்கிறது. கற்பித்தல் தவிர, மாணவர்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றுவது, பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு, போட்டிகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துதல், அழைத்து செல்லுதல், நலத்திட்ட பொருட்களை கொண்டுவருதல் என, கற்பித்தல் சாரா பணிகள் தான் அதிகம்.



வகுப்பு நேரத்தில் இப்பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களால், பாடத்திட்டத்தை உரிய கால அவகாசத்துக்குள் முடிக்க முடியாது. அலுவலக பணியாளர்களே இல்லாமல், ஆசிரியர்களே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது.



அரசு செய்ய வேண்டியதென்ன?



மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகம், கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த வளர்ச்சி குறியீடு, சமீபகாலமாக கீழ்நோக்கி சரிந்து கொண்டே செல்கிறது. இதை சரிகட்ட அரசு போர்கால அடிப்படையில், சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.



*டெட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ஆசிரியர் பணி நியமனங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்



*கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இது தேவையின் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும்பகிர்த்தளிக்கப்பட வேண்டும்



*ஆசிரியர்-மாணவர் இடையே ஏற்படும் உளவியல் சிக்கல்களை, களைய உளவியல் ஆலோசகர் குழு, ஒன்றியம் வாரியாக நியமிக்க வேண்டும். இக்குழு, இருமாதங்களுக்கு ஒருமுறையாவது மாணவர்களை சந்திக்க ஆவண செய்ய வேண்டும்



*தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கும், ஹைடெக் ஆய்வகம் அமைப்பதோடு, அனைத்து பள்ளிகளுக்கும், இணையதள வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஆன்லைன் தேர்வுகள் நடத்துவதாக இருந்தால், லேப்டாப், டேப்லெட் ஆகியவை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்



*காலை சிற்றுண்டி திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி நேரத்தை மாற்றியமைக்கலாம். காலை 8:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை அறிவிக்கலாம். அப்போது தான், காலை சிற்றுண்டி முடித்து, மாணவர்கள் படிக்க வசதியாக இருக்கும்



*ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் நடைமுறை உள்ளது. இதை பத்தாம் வகுப்பு வரை கூட நீட்டிக்கலாம். இதன் வாயிலாக, பத்தாம் வகுப்பு வரை, அடிப்படை கல்வி பெறுவோர் எண்ணிக்கை உயரும். இடைநிற்றல் குறைக்க, இந்நடைமுறை தீர்வாக அமையும்.



*எந்தவொரு திட்டம் அறிவித்தாலும், பரீட்சார்த்த முறையில் சோதனை மேற்கொண்டு, ஆசிரியர்களின் கருத்துகளை பெற்று, அதன்பின் விரிவாக்க வேண்டும். அதிகாரிகளிடம் ஆலோசனை பெறுவதால் தான், நடைமுறை சிக்கல்கள் தெரிவதில்லை.



ஆசிரியர்கள் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என பள்ளிகள் மேலாண்குழு மாநில கருத்தாளர், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர், கல்வியாளர், கட்டுரையாளருமான அருளானந்தம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.