WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 12, 2024

முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் - அரசிதழில் வெளியீடு.

முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வுக்கான பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி, முதுநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்(தையல், உடற்கல்வி உட்பட), வட்டாரக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நேரடி நியமன முறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணியில் உள்ள காலியிடங்களில் பதவி உயர்வு மூலமாக 50 சதவீதமும், நேரடி நியமனம் வாயிலாக 50 சதவீதமும் நிரப்பப்படுவது வழக்கமாகும்.


இதற்கிடையே முதுநிலை ஆசிரியர் தேர்வை பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. பழைய பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறுகிறது. கடைசியாக முதுநிலை ஆசிரியர் தேர்வு 2021-ல் நடத்தப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதேநேரம் இந்த ஆண்டுக்கான முதுநிலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவுசெய்தது.


இதையடுத்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(எஸ்சிஇஆர்டி) சார்பில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழுவின் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை- 1 மற்றும் உருது, அராபிக், தெலுங்கு, மலையாளம் ஆகிய சிறுப்பான்மை மொழிப்பாடங்களின் போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு பொதுப்பள்ளி கல்வி வாரியம் ஒப்புதல் அளித்தது. அந்த பாடத்திட்டத்தை அரசிதழில் வெளியிட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.


அதையேற்று முதுநிலை ஆசிரியர் உட்பட பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுக்குரிய புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி பிறப்பித்துள்ளார். தொடர்ந்து இந்த பாடத்திட்டம் டிஆர்பிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி அடுத்த தேர்வு நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என துறை அதிகாரிகள் தகவல் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.