WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 4, 2025

புதுச்சேரியில் இந்தாண்டு 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் நடைமுறை தொடருமா?

 ஐந்தாம், எட்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் பெயில் என்ற நடைமுறை சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ளசூழ்நிலையில், அதே தேர்ச்சி நடைமுறை புதுச்சேரியில் தொடருமா என, குழப்பம் ஏற்பட்டுள்ளது.


புதுச்சேரியில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, 8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது என்ற முறை அமலில் இருந்து வருகிறது. அதே வேளையில் புதுச்சேரி அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில் புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய கல்வி அமைச்சகம், இந்தாண்டு ஜனவரி, 15ல், பழைய கட்டாய கல்வி சட்டத்தின், 16, 38ம் விதிகளில் இருந்த, கட்டாய தேர்ச்சியை அதிரடியாக திருத்தியுள்ளது. அத்துடன் இது குறித்த கடிதத்தை, மார்ச் 18ம் தேதி பள்ளிகளுக்கு அனுப்பியது.

அதில், இந்த ஆண்டு முதல், தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்கள் பெறாவிட்டால், 'பெயில்' ஆக்க வேண்டும். அதை பெற்றோருக்கு தெரிவித்து, ஒப்புதல் பெற வேண்டும் என, மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதாவது, ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் தேர்வு நடத்தி, அதில் வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அமைச்சகம் வலியுறுத்தியது.

அதிலும் தேர்ச்சி பெறாத மாணவர்களை மட்டுமே, அதே வகுப்பில் மீண்டும் படிக்க அனுமதிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், 5, 8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் பெயில் என்ற நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் இந்த விதி திருத்தப்பட்டது.

இதன்படி, 3,5,8ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் ஆக்கப்படுவர். குறைந்த மார்க் எடுத்தால் பெயிலாக்க சம்மதிக்கிறேன் என, பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு வருகின்றன.

புதுச்சேரியில் அரசு பள்ளிகள் முழுதுமாக சி.பி.எஸ்.இ., பள்ளி பாட திட்டத்திற்கு மாறியுள்ளன. இதனால் புதுச்சேரியில் 8 வகுப்பு வரை தேர்ச்சி நடைமுறை தொடருமா அல்லது புதிய முறைப்படி தேர்ச்சி அறிவிக்கப்படுமா என உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் படி மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வில் தோல்வி கிடையாது என்ற விதி உள்ளபோது, இதுபோன்று மூன்றாம் வகுப்பிலேயே ஒரு மாணவரை தோல்வி அடையச் செய்தால், அவர்கள் இந்த கல்வி திட்டத்தில் இருந்தே வெளியேறி விடுவார்கள். இது பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தான் அதிகரிக்கும் என, கல்வியாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.

சட்டசபையில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, இந்தாண்டு எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவித்தார். ஆனால் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் ஆக்கப்படுவர். குறைந்த மார்க் எடுத்தால் பெயிலாக்க சம்மதிக்கிறேன் என பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு வருவதால் புதுச்சேரி பெற்றோர்கள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தினை நினைத்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கல்வி உரிமைச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி கொண்டுவரப்பட்டது. ஆனால் அதற்கு எதிராகவே புதிய கல்வி கொள்கையில் தேர்ச்சி அணுகுமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி அரசு, மத்திய அரசினை அணுகி, விதி விலக்கு பெற்று, எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் நடைமுறையை தொடர செய்ய வேண்டும் என்பதே பெற்றோர், கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.