WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 11, 2026

மாணவர்களுக்கான பணத்தில் ஊழல் செய்வதற்கு பதில் பிச்சை எடுக்கலாம்: உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்.

 

'ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கும் பணத்தில் ஊழல் செய்வதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாம். அப்பணத்தை சுரண்டித்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாழ வேண்டுமா?' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டம் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம், பாதரக்குடி சக்திவேல் தாக்கல் செய்த பொதுநல மனு:

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கிய, 2 கோடியே 35 லட்சம் ரூபாய் நிதியில் மோசடி நடந்தது. 2017 முதல் 2023 வரை அரசு ஒதுக்கிய தொகையை, மாணவர்களின் கணக்கில் செலுத்தாமல், சம்பந்தப்பட்ட அலுவலர்களால் மோசடி செய்யப்பட்டது.

இதில், தொடர்புடைய சில அலுவலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். சிலர் பணி ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நிலுவையிலுள்ள வழக்கை சி.பி.ஐ., போலீசாரின் சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர், 'ஒரு துணை கலெக்டர், சில தாசில்தார்கள் உள்ளிட்ட, 12 பேருக்கு எதிராக போலீசார் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள விசாரணை அலுவலரை வருவாய்த்துறை செயலர் நியமித்துள்ளார். அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை' என்றார்.

நீதிபதிகள், 'சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்கு பின் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கும் பணத்தில் ஊழல் செய்வதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாம். அப்பணத்தை சுரண்டித்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாழ வேண்டுமா? குற்றம் செய்தவர்களை பாதுகாக்க மக்களின் வரி பணத்தில் அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடுகின்றீர்கள். இத்தகைய அதிகாரிகளை கொண்டு தான் அரசு நிர்வாகம் நடக்கிறது.

ஆட்சி மாறினாலும் அரசு அதிகாரிகள் அதே மனநிலையில் தான் தொடர்கின்றனர். 99 சதவீத அதிகாரிகள் ஊழல் செய்யக் கூடியவர்களே. ஊழல் செய்யும் அதிகாரிகளை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். படித்து முடித்தவுடன் எந்த துறையில் வேலை பார்த்தால் சம்பாதிக்க முடியும் என்ற மனநிலை தான் சமூகத்தில் நிலவுகிறது' என, காட்டமாக தெரிவித்தனர்.

தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் குற்றச்சாட்டு தொடர்பாக எத்தனை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளது, அது தொடர்பாக மேல்முறையீடு, விசாரணை நிலுவை விபரங்களை அரசு தரப்பில் 4 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.