சென்னை மாநகராட்சி பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் 75க்கும் கீழ் பதிவான வகுப்பு ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, கல்வித்துறை அதிகாரிகள் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதில், ஒரு லட்சத்து, 11 ஆயிரத்து, 567 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மேலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வு முடிவுகளில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பின்தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், 75 சதவீத தேர்ச்சியை பதிவு செய்யாத ஆசிரியர்களுக்கு, சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
குறிப்பாக, பெரம்பூர் எம்.எச்., சாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 23 ஆசிரியர்கள்; கொளத்துாரில் ஐந்து ஆசிரியர்கள் உட்பட பல பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கோரி 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
அதில், தேர்ச்சி சதவீதம் குறைவிற்கான காரணம்; மாணவர்கள் தேர்வு நாளில் விடுமுறை எடுத்தது ஏன் உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
கமிஷனருக்கு கடிதம்
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், 'சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தாங்கள் பயிற்றுவிக்கும் பாடங்களில், காலாண்டு தேர்வில் 75 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி சதவீதம் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது, நம் கல்வித்துறையில், இதுவரையில் இல்லாத நடைமுறை. இதனால், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். கல்வி அலுவலர் வசந்தியின் செயல்பாடுகளால், பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அவருக்கு தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.