WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 7, 2014

தகுதி இருந்தும் பேராசிரியர் பணி மறுப்பு - டி.ஆர்.பி., செயலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் : ஐகோர்ட் உத்தரவு

கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில், மிகக்குறைந்த மதிப்பெண்
பெற்றவருக்கு பணி வழங்கப்பட்டு, அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) செயலாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மனுதாரருக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை ஜோசப் தாக்கல் செய்த மனு: 

அரசுக் கல்லூரிகளில் அரசியல் அறிவியல்துறை விரிவுரையாளர்கள் பணி நியமன தேர்விற்கு, 2009 பிப்.,23 ல் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு வெளியிட்டது. அதில், 'பொதுப்பிரிவில் 2, பிற்பட்டோர் 1, மிகவும் பிற்பட்டோர் 1, ஆதிதிராவிடர்களுக்கு 1 இடம் ஒதுக்கப்படும். பொதுப்பிரிவில் 2 இடங்களில், பெண்களுக்கு 1 இடம் ஒதுக்கப்படும்,' என குறிப்பிடப்பட்டது. பொதுப்பிரிவைச் சேர்ந்த நான், அதிகபட்சமாக 36 மதிப்பெண் பெற்றதாக டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், பொதுப்பிரிவில் 5 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. என்னை தேர்வு செய்யவில்லை. பணி வழங்க டி.ஆர்.பி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஐசக்மோகன்லால் ஆஜரானார்.

நீதிபதி:

பொதுப்பிரிவில், 5 மதிப்பெண் பெற்ற விவேகானந்தனுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்குரியது. அதே பொதுப் பிரிவில், மற்றொரு பணியிடத்தை நிரப்பவில்லை. 'அது செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது,' என டி.ஆர்.பி.,தரப்பில் முதலில் கூறினர். பெண்களுக்குரிய இடத்தில், விவேகானந்தனுக்கு பணி வழங்கியுள்ளனர்.

அங்கு, மனுதாரரை ஏன் நியமிக்கவில்லை?

என விளக்கம் கோரியபோது, டி.ஆர்.பி.,தரப்பில் சரியாக விளக்கம் அளிக்கவில்லை. பின், 'தகுதியான பெண் விண்ணப்பதாரர் கிடைக்காததால், விவேகானந்தனை நியமித்தோம்,' என்றனர். இது நம்பும் வகையில் இல்லை. மனுதாரருக்கு, தற்போது பணி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கல்லூரிக் கல்வி இயக்குனரின் உத்தரவிற்காக காத்திருப்பதாகவும், டி.ஆர்.பி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டி.ஆர்.பி.,யின் இந்நடவடிக்கையால், மனுதாரருக்கு 5 ஆண்டுகள் பணி மூப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மனுதாரர் மன உளைச்சல் அடைந்துள்ளார். விரிவுரையாளர்கள் நியமனத்தை, மிக சாதாரணமாக கையாண்டுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மனுதாரரை தேர்வு செய்யாததால், 5 ஆண்டுகளில் 15 லட்சம் ரூபாய் சம்பளத்தை இழந்துள்ளார். இதை, அரசால் ஈடு செய்ய முடியாது. மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழக்குச் செலவிற்கு வழங்க, டி.ஆர்.பி., செயலா ளருக்கு அபராதம் விதிக்கிறேன். மனுதாரருக்கு, 4 வாரங்களில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் பணி நியமனம் வழங்க வேண்டும். கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதை, அறிக்கையாக செப்.,5 ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.