உயர் கல்வி பயிலுவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள
கலை,அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக 163 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில், விதி எண் 110-ல் அவர் இன்று வாசித்த அறிக்கையின் விவரம்:
இட நெருக்கடி களையப்படும்
665 கல்வியியல் கல்லூரிகளின் இணைப்புடன், ஆராய்ச்சிப் பட்டப் படிப்பினையும் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தற்காலிகமாக காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் கல்லூரி வளாகத்தில் மிகுந்த இட நெருக்கடிக்கிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த இட நெருக்கடியை களையும் பொருட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு பல்கலைக்கழகத்திற்கான கல்வியியல் வளாகமும் நிர்வாக வளாகமும் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
மயிலாடுதுறையில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தமிழ்நாட்டிலுள்ள மாணவ, மாணவியர் குறிப்பாக கிராமப்புற பகுதியைச் சார்ந்த, சமூக பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மாணவ, மாணவியர் உயர் கல்வியை பெறும் வகையில், கடந்த மூன்றாண்டுகளில் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 37 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க, மயிலாடுதுறையில் ‘மணல்மேடு’ என்னுமிடத்தில் புதியதாக இரு பாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பாண்டு முதல் துவங்கப்படும்.
புதிய விடுதிக் கட்டடங்கள்:
தமிழகத்தை தொழிற் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வரும் எனது தலைமையிலான அரசு, இந்தியாவில் உள்ள முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் மற்றும் உறுப்புப் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 150 கோடி ரூபாய் நிதியை அளித்து, அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கான வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் பயிலும் இளநிலை மாணவ, மாணவியர்களுக்கென புதிய மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள்; குரோம்பேட்டை, எம்.ஐ.டி-க்கு என நிர்வாகக் கட்டடம் மற்றும் அங்கு பயிலும் இளநிலை மாணவியர்களின் வசதிக்கென புதிய விடுதிக் கட்டடங்கள் ஆகியவை 30 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்:
கல்லூரிகளை துவக்குவதோடு மட்டுமல்லாமல், மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியினை அளிக்க தகுதியான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,623 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போன்று, 2013-14 ஆம் கல்வியாண்டில் பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் புதிய பாடப் பிரிவுகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக, 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும்.
மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம்:
திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 10 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதே போல், கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு மண்டல அலுவலகங்களில் அதிக மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளதால், நிர்வாக வசதிக்காக திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாக பிரித்து தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம்; ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும்.
இவ்வலுவலகம் மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும். மேலும் கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி தர்மபுரியில் ஒரு மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும். இவ்வலுவலகம் அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும். இதன் தொடர்ச்சியாக, வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சேர்க்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான தொடர் மற்றும் தொடராச் செலவினம் 3 கோடியே 22 லட்சம் ரூபாய் ஆகும்.
அறிவு வளங்களை எளிதில் பரிமாறிக் கொள்ள வழிவகை:
இந்தியாவின் அறிவுத் தலைநகரமாகவும், புதுமைத் தளமாகவும் தமிழகத்தை மாற்றுவது தான் எனது அரசின் குறிக்கோளாகும். தற்போதுள்ள எண்ணியல் தொழில்நுட்ப யுகத்தில், உயர் கல்வித் துறையின் 13 பல்கலைக்கழகங்களில், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்களை இணைய தளம் மூலம் இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திலும், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் மின் தொடர்பு நூலக களஞ்சியங்களை இணைய தள வசதியுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்-நூல்கள், மின்-இதழ்கள், ஒளிப் படங்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை, மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து எளிதில் பெற இத்திட்டம் வழிவகை செய்யும். அனைத்து பல்கலைக்கழகங்களும், அவற்றில் இணைவு பெற்ற கல்லூரிகளும், இந்த களஞ்சியத்துடன் இணைக்கப்படும். உலகளாவிய அறிவு வளங்களை எளிதில் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் இத்திட்டம் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் 93 அரசு / பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 100 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது. தற்போது திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகங்கள் தனியார் கட்டடங்களில் அதிக வாடகை செலுத்தி செயல்பட்டு வருகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டும் பணியாளர்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் நல்லதொரு சூழ்நிலையில் பணி புரிவதற்கென இம்மூன்று அலுவலகங்களுக்கும் மொத்தமாக 24,300 சதுர அடி பரப்பளவில் 4 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும்.
163 பாடப் பிரிவுகள் அறிமுகம்
தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதத்தினை உயர்த்தும் பொருட்டும், கிராமப்புறம் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவ, மாணவியர் உயர் கல்வி பெறும் பொருட்டும், கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 797 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இப்பாடப் பிரிவுகளில் 10,204 மாணவ மாணவியர்கள் சேர்ந்து பயனடைந்துள்ளனர். இதன் காரணமாகவும், மொத்த சேர்க்கை விகிதம் 38.2 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று 2014-15 ஆம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 26 இளங்கலை பாடப் பிரிவுகள், 23 முதுகலை பாடப் பிரிவுகள், 62 எம்.பில் பாடப் பிரிவுகள் மற்றும் 52 பி.எச்.டி. பாடப் பிரிவுகள் என மொத்தம் 163 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்காணும் நடவடிக்கைகள் மூலம், உயர் கல்வி வளம் அடைவதோடு தமிழ்நாடும் வளர்ச்சி அடையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.