கட்டாய இடமாறுதல் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று ஆசிரியர்
பயிற்றுநர்கள் ‘TH - உங்கள் குரல்’ மூலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) கீழ் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 4,600 ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி 3,500 ஆசிரியர் பயிற்றுநர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். பொதுவாக, அரசு ஊழியர்கள் 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்ற முடியாது. 3 ஆண்டுகள் ஆனதும் வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள். ஆனால், ஆசிரியர் பணிக்கு மட்டும் இந்த இடமாறுதல் உத்தரவிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் அரசு ஊழியர் கட்டாய இடமாற்றல் உத்தரவு ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கடந்த 9.6.2014 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், திடீரென 21.6.2014 அன்று சுமார் 3,500 ஆசிரியர் பயிற்றுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெண்கள் கடும் பாதிப்பு
இடமாற்றத்துக்கு உள்ளான ஆசிரியர் பயிற்றுநர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் வீட்டில் இருந்து மிகவும் தொலைவான வட்டாரங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் அவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த திடீர் இடமாற்ற நடவடிக்கை தொடர்பாக தமிழகம் முழுவதும் ஏராளமான ஆசிரியர் பயிற்றுநர்கள் ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ மூலம் புகார் தெரிவித்தனர். கட்டாய இடமாற்றம் உத்தரவினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் கூறியதாவது:-
அலைச்சல் - பயணச்செலவு
அனைவருக்கும் கல்வி திட்டத் தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கடந்த 2005 முதல் ஆண்டுக்கு 500 பேர் வீதம் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் கல்விக்கு மாற்றப்பட்டுவந்தனர். ஆனால், கடந்த 2 ஆண்டு களாக இந்த திட்டம் நடை முறைப்படுத்தப்படவில்லை.
தற்போது செய்யப்பட்டுள்ள திடீர் இடமாற்றலில், ஆசிரியர் பயிற்றுநர்கள் மிகவும் தொலைவான மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தினசரி பஸ் செலவுக்கே ரூ.75 முதல் ரூ.100 வரை ஆகிறது. எனவே, மாதம் போக்குவரத்து செலவுக்கு ரூ.3 ஆயிரம் போய் விடும். அதேநேரத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு நிரந்தர பயணப் படியாக (எப்டிஏ) மாதத்துக்கு ரூ.600 மட்டுமே கொடுக்கிறார்கள். வேறு எந்தவிதமான படிகளும் கிடையாது.
இதனால் கைக்குழந்தைகளை வைத்திருப்போர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஏராளமான பெண் ஆசிரியர் பயிற்றுநர்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். ஆசிரியர் பயிற்று னர்களை கட்டாய இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
அதேபோல், முன்பு இருந்து வந்ததைப் போல ஆண்டுதோறும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.