WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 27, 2025

2 முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதிய 48,954 பேர்: மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு.

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இரு முறைக்கு மேல், நீட் தேர்வு எழுதிய, 48,954 மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 11,063 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், 2025 - 26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கு, 72,473 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், போலி ஆவணங்கள் சமர்ப்பித்த, 25 பேர் கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீடு, சிறப்பு ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என்ற அடிப்படையில் தகுதி பெற்ற, 72,194 மாணவர்களின் தரவரிசை பட்டியலை, சென்னையில் நேற்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார்.

முதலிடம்

இதில், அரசு ஒதுக்கீட்டில் நீட் தேர்வில், 665 மதிப்பெண் பெற்ற திருநெல்வேலியை சேர்ந்த சூர்யநாராயணன் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல, 655 மதிப்பெண் பெற்ற சேலத்தை சேர்ந்த அபினீத் நாகராஜ்; 653 மதிப்பெண் பெற்ற திருப்பூரை சேர்ந்த ஹிருத்திக் விஜயராஜா ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இதில், முதல் 10 இடங்களில், மாணவர்கள் ஒன்பது பேர் தரவரிசை பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளனர்.

தகுதி நீக்கம்

மேலும், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில், 572 மதிப்பெண் பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த திருமூர்த்தி; 563 மதிப்பெண் பெற்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த சதீஷ்குமார்; 551 மதிப்பெண் பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த மதுமிதா ஆகியோர், முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

மேலும், கடந்தாண்டுகளில், நீட் தேர்வு எழுதி, மதிப்பெண் குறைவால் கவுன்சிலிங்கில் இடம் கிடைக்காமல் போனவர்கள், இந்தாண்டும் நீட் தேர்வு எழுதினர். அதன்படி, இருமுறைக்கு மேல் நீட் தேர்வு எழுதிய, 48,954 மாணவர்கள், தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

பிறப்பு, இருப்பிட சான்றிதழ், உறவு முறை சான்றிதழ் உள்ளிட்டவை போலியாக அளித்த, 25 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஒரு தனியார் மருத்துவ கல்லுாரியில், 50 எம்.பி.பி.எஸ்., இடங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. ஆனால், அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடங்கள் குறையவில்லை.

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை வரும், 30ம் தேதி துவங்கும். இந்தாண்டு 60, 67 வயதானவர்களும் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், தரவரிசை பட்டியலில், அவர்கள் தகுதி பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.