Saturday, June 18, 2016
கல்வி கட்டண கமிட்டி தலைவர் அலுவலகம் மூடல்!
கல்வி கட்டண கமிட்டிக்கு, ஆறு மாதமாக தலைவர் இல்லாததால், அவரது அலுவலகம் இழுத்து மூடப்பட்டுள்ளது. அதனால், புகார் கொடுக்க வரும் பெற்றோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ல் அமலுக்கு வந்ததும், நீதிமன்ற உத்தரவுப்படி, சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன், கமிட்டியின் முதல் தலைவரானார்.
நெருக்கடி
பள்ளிகளின் உள்கட்டமைப்பு அடிப்படையில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. கட்டணத்தை உயர்த்தும்படி, தனியார் பள்ளிகள் நெருக்கடி கொடுத்ததால், நீதிபதி கோவிந்தராஜன், பதவியில் இருந்து விலகினார். பின், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைவரானார். அவர், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்து, புகார்களை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்; ஆட்சி மாற்றம்வந்ததும், 2012ல் அவர் பதவி விலகினார்.
இதை தொடர்ந்து, 2012 ஜனவரியில், ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு, புதிய தலைவரானார். அவரும், 2015 டிசம்பர், 31ல் ஓய்வு பெற்றார். அந்த இடத்திற்கு, இதுவரை எந்த நீதிபதியும் நியமிக் கப்படவில்லை. நிலுவையில் இருக்கும் ஒரு சில வழக்குகள் மற்றும் புகார்களை, கமிட்டியின் சிறப்பு சட்ட அதிகாரி மனோகரன் விசாரித்தார். அவரது பதவிக் காலமும் மார்ச்சில் முடிந்தது.
இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதும், தனியார் மெட்ரிக் பள்ளிகளை நிர்வகிக்கும், இணைஇயக்குனர் ஸ்ரீதேவி, கட்டண கமிட்டியின் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
நேரமில்லை
இவர், பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல்; பள்ளிகளை ஆய்வு செய்தல்; நீதிமன்ற வழக்குகளை கவனித்து, செயலகத்தில் அறிக்கை அளித்தல் போன்ற பணிகளுக்கே நேரம் இல்லாமல் திணறுவதால், சென்னை, பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் உள்ள கமிட்டி அலுவலகம் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
அதனால், கல்வி கட்டண கமிட்டி தலைவர் அலுவலகம் இழுத்து மூடப்பட்டுள்ளது. தினமும் அலுவலக ஊழியர்கள் வந்து, காலை முதல் மாலை வரை வெறுமனே இருந்து விட்டு, வீட்டுக்கு புறப்படுகின்றனர். இதனால், புகார் கொடுக்க வரும் பெற்றோர், அதிகாரியில்லாமல் வெறிச்சோடி கிடக்கும் கமிட்டி அலுவலக கண்ணாடி கதவை பார்த்துவிட்டு, ஏமாற்றத் துடன் திரும்புகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.