Saturday, June 25, 2016
வேலை இல்லாதவர்களுக்கான உதவித் தொகை உயர்த்தப்படுமா?
வேலை இல்லாதவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை 10 ஆண்டுகளாகியும் உயர்த்தப்படவில்லை. எனவே, உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 85 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து, பணிகளுக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். இவர்களுக்காக வேலை இல்லாதவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தை 2006-இல் தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்தது.
உதவித் தொகை எதற்கு?வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளியாக இருந்தால் ஓராண்டு நிறைவு செய்திருந்தால் போதுமானது. படிப்பை முடித்து, வருமானம் இன்றி வாடும் நபர்கள், வேலை தேடி விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் அஞ்சலகச் செலவு, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி புத்தகங்கள் வங்குவதற்கான செலவு உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்கின்ற வகையில் இந்தத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது.
உதவித் தொகை எவ்வளவு? பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.100, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 200, பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 300 என கல்வித் தகுதிக்கேற்ப உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
உதவித் தொகை பெறுவது குறைகிறது! இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலங்களில் 3 லட்சம் பேர் உதவித் தொகை பெற்று வந்தனர். பின்னர் 2013-14-இல் 1.03 லட்சம் பேராகவும், 2014-15-இல் 95 ஆயிரம் பேராகவும், 2015-16-ஆம் ஆண்டில் 70 ஆயிரம் பேராகவும் குறைந்துவிட்டது.
பயனாளிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதற்கு, விலைவாசி உயர்வும், அதற்கேற்ப உதவித் தொகை மாற்றியமைக்கப்படாததுமே காரணம் என்கின்றனர் பட்டதாரிகள்.
இதுகுறித்து பட்டதாரி பலராமன் கூறியதாவது:
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் உதவித் தொகை உயர்த்தப்படவேயில்லை. ஆனால், புத்தகங்களின் விலை, ஆன்-லைன் விண்ணப்பக் கட்டணம், மாநில- மத்திய அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணம் உள்ளிட்டவை பன்மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டன.
இந்த விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உதவித் தொகையையும் உயர்த்தினால்தான், அரசின் நோக்கம் நிறைவேறும். மேலும், இந்த உதவித்தொகையை பெற அலைக்கழிக்கப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
அரசுக்குப் பரிந்துரை: இதுகுறித்து வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
உதவித் தொகை பெறுவோர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, இந்த உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என வேலைவாய்ப்பு துறை மூலம் அரசுக்கு ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.