'செட்' தேர்வில், நீதிமன்ற உத்தரவை மீறி, நுாலக அறிவியல் பாடத்தை இணைக்க, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., மறுத்து
விட்டது. அதனால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், நுாலகர்கள்
பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, 'நெட்' மற்றும் மாநில அளவிலான, 'செட்' தேர்வு என, ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, 'செட்' தேர்வு, ஏப்., 23ல் நடக்க உள்ளது. தேர்வுக்கான பாட பட்டியலில், இந்த ஆண்டும், நுாலக அறிவியல் பாடம் சேர்க்கப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு நுாலக நிபுணர்கள் சங்க பொதுச்செயலர், எஸ்.மணிகண்டன் கூறியதாவது: கடந்த ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், நான் தொடர்ந்த வழக்கில், நுாலக அறிவியல் பாடத்தையும், 'செட்' பட்டியலில் இணைத்து, ஆறு மாதங்களில் தேர்வு நடத்த வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசு இந்த தேர்வை நடத்தவில்லை. இந்நிலையில், இந்தாண்டுக்கான, 'செட்' தேர்வு பட்டியலிலும், நுாலக அறிவியல் பாடம் சேர்க்கப்படவில்லை. அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 21 நுாலக அறிவியலுக்கான பேராசிரியர் இடங்களை நிரப்ப, ஜூனில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த
உள்ளது. 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மட்டுமே, இத்தேர்வில் பங்கேற்று, வேலை வாய்ப்பு பெற முடியும். அதனால், இந்தாண்டே, 'செட்' தேர்வில், நுாலக அறிவியல் பாடத்தை சேர்க்கக்கோரி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும், தேர்வுக்கு தடை பெறவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
யு.ஜி.சி., அனுமதி மறுப்பு : 'செட்' தேர்வு கமிட்டியின் உறுப்பினர் செயலரும், கொடைக்கானல் தெரசா பல்கலை பதிவாளருமான, கீதா கூறுகையில், ''நுாலக அறிவியல் பாடத்தை, செட் தேர்வில் இணைக்க முயற்சித்தோம். பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி அளிக்கவில்லை. அடுத்த ஆண்டு தேர்வில், நுாலக அறிவியல் இடம் பெறும் என, கூறிவிட்டனர்,'' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.