WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 28, 2017

அரசு பள்ளிகளின் செயல்பாடு குறித்து உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பள்ளிக்கு சரியாக வராமல், சொந்த தொழிலில் ஈடுபடும் பெரும்பாலான ஆசிரியர்களால், மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது; அந்த அரசு பள்ளி மாணவர்களை, ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் காணப்படும் பிரச்னைகள் தொடர்பாக, தமிழக அரசிடம், 20 கேள்விகளை சரமாரியாக எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், பந்தநல்லுாரில், பசுபதி நடுநிலை பள்ளி உள்ளது; இது, அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு ஆங்கில வழி வகுப்பை துவங்க, பள்ளி நிர்வாகம் அனுமதி கோரியது. அதை, பள்ளி கல்வித் துறை நிராகரித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 'அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு அனுமதியளிக்கும் போது, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறது' என, மனுவில் கூறப்பட்டது. ஆங்கில வழி கல்வி மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: அரசின் உத்தரவுப்படி, பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2013 முதல், ஆங்கில வழி வகுப்புகள் துவங்க, அரசு முடிவெடுத்திருப்பது தெளிவாகிறது. ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டாலும், தமிழ் மற்றும் ஆங்கில வழி படிக்கும் மாணவர்களை ஒன்றாக உட்கார வைத்து, தமிழ் வழி மாணவர்களுக்கு, கற்று தரும் ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்துவதாகவும், மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இது, உண்மை என்றால், ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டதன் நோக்கம் வீணாகி விடும். தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் படிக்க வைக்கின்றனர். அதன்மூலம், தனியார் பள்ளிகளில் கல்வி தரம் நன்றாக உள்ளது தெளிவாகிறது.அதே தரத்தை, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்க, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் தவறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கற்பித்தலில் ஆர்வம் காட்டாமல், குடும்பத்தினர் பெயரில், வட்டிக்கு விடுதல், பங்குச் சந்தை, 'ரியல் எஸ்டேட்' போன்ற தொழில்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. அதிக சம்பளம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம், அதிக நேரம் பணி உள்ளது. அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைவாக இருப்பதால், தனியார்பள்ளிகளை, பெற்றோர் நாடுகின்றனர். ஐந்தாம், ஆறாம் வகுப்பில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களால், சரியாக எழுத படிக்க தெரிய வில்லை. இத்தகைய நிலை, பெரும்பாலும் கிராமப்புற அரசு பள்ளி ஆசிரியர்களின் நடவடிக்கைகளால் எழுகிறது.அதேநேரத்தில், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும், அரசு ஆசிரியர்களும் இருக்கின்றனர். அவர்களின் கடமை தவறாத பணிக்காக, பாராட்ட வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்களுக்கு கற்பிக்கவில்லை என்றால், அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது. சரிவர பணிக்கு வராமல், சொந்த தொழிலில், ஆசிரியர்கள் ஆர்வமாக இருந்தால், அரசு பள்ளி மாணவர்களை, ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. இந்த நடைமுறையை முழுமையாக சரிசெய்யாமல், ஆங்கில வழி வகுப்புகளை துவக்குவதில், எந்த பயனும் இல்லை. கல்வி தரம் குறைவதை கருத்தில் கொண்டு, கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க, தன்னார்வ அமைப்புகளை ஈடுபடுத்துவது பற்றி, அரசு யோசிக்க வேண்டும். தற்போதைய கல்வி நிலையை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த, கீழ்கண்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். * அரசு எடுத்த கொள்கை முடிவின்படி, ஆங்கில வழி வகுப்புகள் துவங்க, எத்தனை பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது * தமிழகம் முழுவதும், ஆங்கில வழி வகுப்புகளில், எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர். 2012 - 13 முதல், ஆண்டு வாரியாக விபரங்கள் அளிக்க வேண்டும் * தமிழ் வழி கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் தான், ஆங்கில வழி கல்வியையும் கற்பிக்கின்றனரா? * ஆங்கில வழி கல்வி கற்பிக்க, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா; அவ்வாறு எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் * ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி என்ன? * அரசு பள்ளிகளை விட, கிராமப்புறங்களில் தனியார் பள்ளிகளை, பெற்றோர் நாடுவது ஏன்? * அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என, அரசு ஏன் கட்டாயப்படுத்தக் கூடாது? * சரியான நேரத்தில் பணிக்கு வர தவறிய ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? * ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை சரிபார்க்க, பணி நேரத்தில் அவர்கள் பணியில் இருக்கின்றனரா என்பதை பரிசோதிக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதா? * அரசு பள்ளிகளில், குறிப்பாக கிராமப்புறம், மலை பகுதிகளில் உள்ள பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' முறையை ஏன் அறிமுகப்படுத்தக் கூடாது? * பள்ளி நேரங்களில், மொபைல் போன் பயன்படுத்த, ஆசிரியர்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது? * ஆசிரியர்களின் வருகை, கற்பித்தலை சரிபார்க்க, பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சாத்தியம் உள்ளதா? * ஆசிரியர்களின் பணிமூப்பை, மாநில அல்லது மாவட்ட வாரியாக கொண்டு வருவதன் மூலம், அவர்களை சொந்த இடத்துக்கு வெளியில் பணியாற்ற ஏற்பாடு செய்வது உகந்ததாக இருக்காதா? * மாறி வரும் நிலைக்கு ஏற்ப, ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படுகிறதா? * கடந்த, 10 ஆண்டுகளில், அரசு உயர்நிலை பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை; கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை என்ன? * அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளில், 10 ஆண்டுகளில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் எவ்வளவு? * கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் என்ன? * போலீசாருக்கு இருப்பது போல், சங்கம் துவங்க, ஆசிரியர்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது; கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்பதால், எதிர்கால மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்கள் என்பதால், தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க, சங்கத்தை பயன்படுத்துவதால், அதை துவங்க, அரசு ஏன் தடை விதிக்க கூடாது? * கிராமப்புறங்களில் கல்வி தரத்தை மேம்படுத்த, அரசு பள்ளிகளை நிர்வகிக்க, தன்னார்வ அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனியாரை ஏன் ஈடுபடுத்தக் கூடாது? இந்த வழக்கு விசாரணை, ஜூலை, 14க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.