நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும் செய்முறை தேர்வு நடத்தப்படுவதால், பிப்ரவரி மாதம் முழுவதுமே, அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
இதனால்,
மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில், பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பிளஸ் 1 பொதுத்தேர்வாக மாற்றப்பட்டதுடன், பிளஸ் 2வுக்கு, நடத்துவது போன்றே, செய்முறை தேர்வுகளும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கமாக பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கி, 15 நாள் வரை செய்முறை தேர்வுகள் நடக்கும். இத்தேர்வுகளுக்கு, அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்கள், தேர்வு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவது வழக்கம்.
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படுவதால், தமிழகம் முழுவதும், 15 லட்சம் மாணவர்களுக்கும் அதிகமாக பங்கேற்பர். இதனால், செய்முறை தேர்வு, 30 நாள் வரை நடத்த வேண்டியிருக்கும். தனியார் பள்ளிகளில் நடக்கும் செய்முறை தேர்வுகளுக்கும், அறை கண்காணிப்பாளராக, அரசு பள்ளி ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் தேர்வுப்பணிக்கு செல்ல வேண்டியிருப்பதால், அரசு பள்ளிகளில், பிப்ரவரி மாதம் முழுவதும், முதுகலை ஆசிரியர்கள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளில், பிப்ரவரி 3வது வாரத்துக்குள், செய்முறை தேர்வுகள் முடிந்துவிடும். அந்த பணிகளை முடித்துவிட்டு, பள்ளிக்கு திரும்பும் ஆசிரியர்கள், இரண்டு வாரம் வரை, மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த, அவகாசம் இருக்கும்.
நடப்பு கல்வியாண்டில், பிப்ரவரி மாதம் முழுவதும் செய்முறை தேர்வுகள் நடக்கும். அதில், அதிகபட்சமாக, ஒவ்வொரு மாணவனும், மூன்று நாள் வரைதான் பங்கேற்பர். மற்ற நாட்களில், ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறையில் அமர வைத்தோ, ’ஸ்டடி லீவு’ என, விடுமுறையோ விட வேண்டும். செய்முறை தேர்வு முடிந்தவுடன், பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், தேர்வுக்கு தயார் படுத்துவதற்கு, கால அவகாசம் இருக்காது.
மாணவர்கள் சந்தேகம் கேட்க நினைத்தாலும், ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க மாட்டார்கள். மாணவர்களை ஒரு மாதம் வரை, கண்காணிப்பு இல்லாமல் இருந்தால், அலட்சியப்போக்கு அதிகரித்துவிடும். இதனால், தேர்ச்சி விகிதமும் குறையும். இதனால், வகுப்பறைகளில், பாடம் நடத்துவதை பாதிக்காத வகையில், செய்முறை தேர்வுகளை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.