Saturday, September 29, 2018
நீட் தேர்வில் குளறுபடியைத் தவிர்க்க புதிய ஏற்பாடு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசி தகுதிகாண் (நீட்) தேர்வில் குளறுபடியைத் தவிர்க்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. 
நீட் தேர்வு கருணை மதிப்பெண் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான சிபிஎஸ்இ மனு,உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங் ஆஜராகி, நீட் தேர்வு முறை போன்ற பொதுவான தேர்வு முறைகளை தமிழகம் 20 அல்லது 30 ஆண்டுகளாக எதிர்த்து வருகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகேஸ்வர ராவ், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே தமிழகம் எதிர்த்து வருகிறது என்றார்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங் தனது வாதத்தில், நீட் தேர்வு வினாத்தாள் தமிழ் மொழிப் பெயர்ப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி கருணை மதிப்பெண் வழங்க வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 
வினாத்தாளில் குழப்பம் நேரும் போது சரிபார்த்துக் கொள்ளவே இருமொழி வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கல்வியாண்டு தொடங்கி நீட் தேர்வு வினாத்தாளில் குளறுபடி நேராத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
உதாரணமாக ஆங்கிலத்தில் உள்ள நீட் தேர்வு வினாத்தாள் பிராந்திய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அந்த வினாத்தாள் மீண்டும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு சரிபார்க்கப்படும் என்றார். 
மனுதாரரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்ஜிஆர் பிரசாத், நீட் தேர்வு வினாத்தாளில் தமிழில் கேட்கப்பட்ட 49 கேள்விகளில் சிறிய அளவிலான தவறு நேரவில்லை. 
ஆங்கில வினாத்தாளைப் பார்த்து தேர்வு எழுதவேண்டும் என்றால்,இருமொழிகளில் தயாரிக்கப்பட்ட வினாத்தாளுக்கு என்ன அர்த்தம்? 49 கேள்விகள் தவறாக கேட்கப்படும் போது, அந்த தேர்வு எப்படி சமமான தேர்வாக இருக்க முடியும் என்றார்.
அப்போது நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, பிராந்திய மொழிகளுடன் சம்ஸ்கிருதம் மிகவும் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது என பி.ஆர். அம்பேத்கரே கூறியுள்ளார். அப்படியென்றால், நீட் தேர்வுக்கான இரு மொழி வினாத்தாளில் ஆங்கிலத்துக்குப் பதிலாக, சம்ஸ்கிருதத்தை இடம் பெறச் செய்யலாமா? என வினவினார்.
அதற்கு மனுதாரர் சார்பில்ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாத், பிராந்திய மொழிகளில் கல்வி பயிற்றுவிப்பது மாநிலங்களின் உரிமை என்றார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.