WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 18, 2021

குறைப்பு!10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 35 சதவீத பாடத்திட்டம்...

 



பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 35 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு குறுகிய காலமே உள்ளதாலும், முழு அளவில் பாடங்களை நடத்த முடியாது என்பதாலும், கல்வித் துறை இம்முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில், கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள், நாளை திறக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மட்டும், பெற்றோர் சம்மத கடிதத்துடன் வர உத்தரவிடப்பட்டு உள்ளது.

கொரோனா நோய் பரவலை தடுக்க, பள்ளிகள், கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும், 2020 மார்ச், 25 முதல் மூடப்பட்டன.




சுற்றறிக்கை

கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளதை தொடர்ந்து, நாளை முதல், ௧௦ மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பொதுத் தேர்வுக்கு சில மாதங்களே உள்ளதால், அனைத்து பாடங்களையும் நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ஏற்கனவே வெளியிடப்பட்ட, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தில், 35 சதவீத பாடங்களை குறைத்து, பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

'குறைக்கப்பட்ட, முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத் திட்டத்தை, ஆசிரியர்கள் முதலில் முடிக்க வேண்டும். நேரம் இருந்தால், மீதமுள்ள பாடங்களையும் முடிக்கலாம். 'போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அந்தந்த தேர்வுக்கு ஏற்ப, பாடத் திட்டங்களை படிக்க வேண்டும்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

மேலும், இரு வகுப்புகளிலும், குறைக்கப்பட்ட பாடத் திட்ட விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள்மாநில பாடத் திட்டத்தில் உள்ள, அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், இவ்விபரங்களை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கிடையில், நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்கள், பெற்றோர் சம்மத கடிதத்துடன் வர உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கான, அரசு வழிகாட்டு நெறிமுறைகள் விபரம்:

*'பயோ மெட்ரிக்' வருகை பதிவை, தற்போது பயன்படுத்த வேண்டாம். அதற்கு தொடுதல் இல்லாத வகையில், மாற்று ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும்

*மைதானத்தில் பிரார்த்தனை கூட்டம், விளையாட்டு போன்ற நடவடிக்கைகளுக்கு, தற்போது அனுமதிஇல்லை

*ஒவ்வொரு வகுப்பிலும், அதிகபட்சம், 25 மாணவர்கள் மட்டும் இருக்குமாறு, குழுக்களாக பிரிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி, மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும். மதிய உணவு எடுத்து வர அனுமதிக்கலாம்; ஆனால், ஒன்றாக அமர்ந்து சாப்பிடக் கூடாது. பேனா, பென்சில், நோட்டு, புத்தகங்களை பகிரக்கூடாது

*விடுதிகளில் உணவு, சுகாதாரத்தை உரிய முறையில் பேண வேண்டும்

*சுகாதாரத் துறை சார்பில், ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு உதவியாளர் அல்லது செவிலியர் பணியில் இருப்பார். அவசர மருத்துவ உதவிக்கான எண்கள், பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் இடம் பெற வேண்டும்

*மாணவர்களுக்கு சுகாதாரத் துறை வழியாக, 'வைட்டமின்' மற்றும் இரும்பு சத்து மாத்திரை வழங்கப்படும். உடல்அளவில் பலவீனமான மாணவர்கள், பள்ளிக்கு வர வேண்டாம்

*காய்ச்சல் உள்ள மாணவர்களை அனுமதிக்க வேண்டாம். அனைத்து மாணவர்களும் முக கவசம் அணிந்து வர வேண்டும்

*பள்ளி வளாகத்தில் நுழையும் போது, கிருமி நாசினி பயன்படுத்தி, கைகளை சுத்தம் செய்த பின், மாணவர்களை அனுமதிக்க வேண்டும்

*மாணவர்களின் உடல் வெப்பநிலை, தினமும் பரிசோதிக்கப்பட வேண்டும். பள்ளிகள், காலை முதல் மாலை வரை இயங்க வேண்டும்

*மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்து, அச்சம் ஏற்படுத்தக் கூடாது. வாரத்தில், ஆறு நாட்கள் வகுப்பு நடத்தி, தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும்

*முதல் இரண்டு நாட்கள், மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' நடத்தி, மனநல ஆலோசனை தர வேண்டும். அதன் பின்னரே, பாடம் நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.