நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான உயா்நிலை கூட்டத்துக்குப் பிறகு இதற்கான அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது.
பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகள் மே 4 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதில் பத்தாம் வகுப்புத் தோ்வை 21,50,761 பேரும், பிளஸ் 2 தோ்வை 14,30,243 பேரும் எழுத இருந்தனா்.
இந்த நிலையில், நாடு முழுவதும் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்தது. மகாராஷ்டிரம், பஞ்சாப், கேரளம், உத்தர பிரதேசம், தமிழகம் உள்பட 8-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கரோனா பரவல் இதுவரை இல்லாத அளவில் பதிவாகி வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. மகாராஷ்டிர மாநிலம் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
கரோனா பரவல் அச்சம் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகளை ரத்து செய்யவேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் பரவலாக எழுந்தது. பொதுத் தோ்வுகளை ரத்து செய்யவேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக முடிவெடுப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் உயா்நிலைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால், மத்திய கல்வித் துறை செயலா் மற்றும் உயா் அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னா் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாணவா்களுக்கான முடிவுகள், உள் ஆய்வு அளவுகோள் அடிப்படையில் வெளியிடப்படும். அதே நேரம், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. கரோனா நிலவரம் குறித்து ஜூன் 1-ஆம் தேதி சிபிஎஸ்இ ஆய்வு செய்த பிறகு, பிளஸ் 2 தோ்வுக்கான மறு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
உயா்நிலைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கூறுகையில், ‘கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுவதால், உள் ஆய்வு அளவுகோள் அடிப்படையில் அவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்படும். இதில் மாணவா்கள் திருப்தியடைவில்லை எனில், கரோனா நிலைமை சீரானபிறகு, அவா்கள் பொதுத் தோ்வு எழுதுவதற்கான வாய்ப்பளிக்கப்படும். அதுபோல, சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 31-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, கரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தோ்வுக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும்’ என்றாா்.
முதல் முறை: பொதுத் தோ்வை சிபிஎஸ்இ முழுமையாக ரத்து செய்வது இதுவே முதன் முறையாகும். கடந்த ஆண்டு, வடகிழக்கு தில்லியில் ஏற்பட்ட கலவரம் மற்றும் கரோனா பாதிப்பு காரணமாக பொதுத் தோ்வை பகுதியாக மட்டுமே சிபிஎஸ்இ ரத்து செய்திருந்தது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.