WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, April 11, 2021

ஆசிரியர் தேர்வு வாரிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு?

 




ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக இருந்து, பணியை சிறப்பாக செய்யாத, ஒன்பது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை,கட்டாய ஓய்வில் அனுப்புவதற்குரிய, சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு, மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் பரிந்துரை செய்துள்ளார்.'ஆசிரியர் தேர்வு வாரியம், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், தகவல்கள் தரவில்லை' என, கவுதமன்,லட்சுமிகாந்தன், தாமோதரன், அசோக்குமார், சிமியான் ஆகியோர், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில், மேல் முறையீடு செய்தனர்.


அனைத்து வசதிகள்

அதை விசாரித்த, தகவல் ஆணையர் முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு:ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியாற்றும், ஊழியர்கள் முதல் தலைவர் வரை, வினாத்தாள்கள், விடைக்குறிப்பு தயார் செய்யும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அனைவருமே, ஏற்கனவே மாணவர்களாக இருந்தவர்கள். பல தேர்வுகளை எழுதி, அரசு பணிக்கு வந்தவர்கள். தேர்வாணையங்களில் பணியாற்றுவோர், சரியாக செயல்படவில்லை என்றால், அதற்கு, அங்கு பணியாற்றுவோர், பொறுப்புடனும், வெளிப்படை தன்மையுடனும் செயல்படாதது தான் காரணம்.ஒரு தவறு நடந்தால், அந்த தவறு, அடுத்த முறை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, அதன் தலைமைப் பதவிகளில் இருப்போரின் கடமை. ஆனால், ஒவ்வொரு தேர்வுகளிலும், அதே தவறு மீண்டும் மீண்டும் நடந்து வருகிறது.பி.எச்டி., முடித்தவர்கள் எத்தனையோ பேர், சரியான பணி கிடைக்காமல் இருக்கின்றனர்.

இங்கு பணிபுரிவோருக்கு, அனைத்து வசதிகளையும், அரசு வழங்கி உள்ளது.அதன் பின்னரும் பொறுப்பு இல்லாமல், தவறான வினாக்களை கேட்பது; தவறான விடைக்குறிப்புகளை வெளியிடுவது; தேர்வுகளில் காலதாமதம்; தேர்வு ரத்து; பணி நியமனம் நடக்காமல் இருப்பது போன்ற தவறுகள், திரும்ப திரும்ப நடக்கின்றன.இவை தொடர்பாக, பல மேல் முறையீட்டு வழக்குகள், இவ்வாணையத்தால் விசாரிக்கப்பட்டு, ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.இப்பிரச்னைகளில், ஆசிரியர் தேர்வு வாரியம், தன் பணியை, சரிவர செய்யவில்லை என்பது, தெளிவாக தெரிகிறது.ஆணையம், ஏற்கனவே உத்தரவிட்ட பின்னும், முழுமையான தகவல்கள், மனுதாரர்களுக்கு வழங்கப்படவில்லை.



தவறாக தயார் செய்தவர்



எனவே, இவ்வழக்குகளில் தொடர்புடைய மனுதாரர்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நேரடியாக அழைத்து, ஆணை கிடைக்கப்பட்ட, 20 நாட்களுக்குள், அவர்களுக்கு தேவையான தகவல்களை, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வழங்க வேண்டும்.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டி தேர்வுகளில், தவறான வினாத்தாள்கள், விடைக்குறிப்புகள் தயார் செய்தது தவறு. இது, நீதிமன்றம் அல்லது மற்ற அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டு இருந்தால், அவற்றை தயார் செய்தவர்களின் பணி பதிவேடுகளில், 'விடைத்தாள் அல்லது விடைக்குறிப்புகளை, தவறாக தயார் செய்தவர்கள்' என்று, பதிவு செய்ய வேண்டும். அத்துடன், சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு, தகவல் ஆணையம் பரிந்துரைக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியத்தில், தலைவர்களாக இருந்தவர்கள், போட்டித் தேர்வு நடைமுறைகளில், அனுபவம் உள்ளவர்கள்.



செவ்வனே செய்யவில்லை



எனினும், ஆசிரியர் தேர்வு வாரியத்தை, சரியாக நிர்வாகம் செய்யாததால், அவர்கள் அனுபவம் இல்லாத, மற்ற அரசுப் பணிகளை செய்வதும், பொது அதிகார அமைப்புகளை, சிறப்பாக நிர்வாகம் செய்வதும் கடினம்.எனவே, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், சுர்ஜித் கே சவுத்ரி, விபுநாயர், காகர்லா உஷா, ஜெகன்நாதன், சீனிவாசன், நந்தகுமார்.ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகியோரின் பணிப் பதிவேடுகளில், 'பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத் தன்மையோடு செய்ய வேண்டிய பணிகளை, செவ்வனே செய்ய வில்லை' என்று, பதிவு செய்ய வேண்டும்.அவர்களின் பணி விதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கையாக, கட்டாய ஓய்வில் அனுப்புவதற்குரிய, சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள, தலைமைச் செயலருக்கு, தகவல் ஆணையம் பரிந்துரை செய்கிறது.இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.