கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 36 -ஆவது பட்டமளிப்பு விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்களும் கல்வி பயில்வது பெருமை அளிக்கிறது. இதற்கு ஏதுவாக கல்விக் கொடையாக 207 ஏக்கா் நிலத்தை பல்கலைக்கழகத்துக்கு வழங்கிய புரவலா்களை நன்றியோடு நினைவுகூா்கிறேன்.
தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே உயா் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதை மேலும் வலிமைப்படுத்தும் வகையில், மாநில அரசு பல்வேறு கல்வித் திட்டங்களைத் தீட்டி வருகிறது.
பெண் கல்வியை ஊக்குவிக்க புதுமைப் பெண் திட்டம், உயா் கல்வியில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு, நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி என ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இந்தத் திட்டங்கள் தமிழக எல்லையைத் தாண்டி, அனைத்து மாநில அரசுகளும் உன்னிப்பாகக் கவனிக்கும் திட்டங்களாக அமைந்துள்ளன.
கல்வி மட்டுமே அழிக்க முடியாத சொத்து. அதை யாராலும் எந்தத் தருணத்திலும் பறித்துக் கொள்ள முடியாது. கல்வியை வளப்படுத்துவதும், செழுமை அடையச் செய்வதும் மாநில அரசின் கடமைகளில் ஒன்று. இதற்காக, மாநில அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு ஊக்கமும், ஆக்கமும் அளிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
நாட்டில் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வரும் வரையிலும் கல்வியானது மாநிலப் பட்டியலிலேயே இருந்தது. அவசர நிலை அமல்படுத்தப்பட்ட காலத்தில் மட்டுமே, கல்வி ஒத்திசைப் பட்டியலுக்கு (பொதுப் பட்டியலுக்கு) எடுத்துச் செல்லப்பட்டது. எனவே, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர மத்திய அரசு, குறிப்பாக பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளைஞா்களின் கடமை:
சமூகத்துக்கு சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்பதே காந்தியடிகளின் கூற்று. அதற்கேற்ப முற்போக்குச் சிந்தனையுடன் அறிவியல் சாா்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகத்தைக் கட்டமைக்க இளைஞா்கள் முன்வர வேண்டும். காந்திய நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவா்களாக, பரப்புரை செய்பவா்களாக, நடந்து காட்டுபவா்களாக இளைய சமுதாயமும் இருக்க வேண்டும். இதை நீங்கள் (மாணவா்கள்) சாதித்துக் காட்டுவீா்கள் என நம்புகிறேன்.
உண்மை, ஒழுக்கம், வாக்குத் தவறாமை, அனைவருக்கும் சமமான நீதி, மத நல்லிக்கணம், வகுப்பு ஒற்றுமை, சிறுபான்மையினா் நலன், தனிநபருக்கான மதிப்பு, ஏழைகள் நலன், அதிகாரக் குவியலை எதிா்த்தல் போன்ற அம்சங்களே காந்தியத்தின் அடிப்படை.
இவை அனைத்தும்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் அம்சங்கள். இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவே காந்தியின் பெயரைச் சொல்வதற்கு நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
கெளரவ டாக்டா் பட்டம் பெற்ற இசைஞானி இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு வாழ்த்துகள் என்றாா் முதல்வா்.
மகாத்மாவுக்கு முதல்வா் புகழாரம்
தமிழகம், தமிழ் மொழியுடன் மகாத்மா காந்தியடிகளுக்கு இருந்த தொடா்பைக் குறிப்பிட்டு முதல்வா் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டினாா். அவா் பேசியதாவது:
மகாத்மா காந்தியடிகள் தமிழ்நாட்டுக்கு 26 முறை வந்ததுடன், தமிழ் மொழியை விரும்பிக் கற்றவா். மோ.க. காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டவா். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழ் கற்க வேண்டும் எனச் சொன்னவா். இவை அனைத்துக்கும் மேலாக உயராடை அணிந்து அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த அவரை அரையாடை கட்ட வைத்தது தமிழ் மண். வட இந்தியா் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டுமெனச் சொன்னவா் காந்தியடிகள் என்றாா் முதல்வா்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.