WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 27, 2024

பள்ளி பெயர்களில் உள்ள ஜாதியை அகற்ற வேண்டும் அரசு பள்ளி என்றே பெயரிட உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஜாதி, சமூகத்தை குறிப்பிடும் வகையிலான பெயர்களை, பள்ளி பெயர்களில் இருந்து அகற்றவும், அரசு பள்ளி என்றே பெயரிட வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 66 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக - பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காண அரசை வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை வழக்கில் பிரதிவாதிகளாக சேர்த்து, பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது பிறப்பித்த உத்தரவு:

கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு, அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கின்றனவா; அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என்பதை, அரசு தெளிவுப்படுத்த வேண்டும். அந்தப் பகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு, நலனுக்கு, அரசு தரப்பில் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விளக்க வேண்டும். இதுகுறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், அதுகுறித்து அதிருப்தி தெரிவித்தனர். அரசுக்கும் பல கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலர் தாக்கல் செய்த அறிக்கை, போதுமானதாக இல்லை; நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கூறியது போல, நடைமுறையில் உள்ளதை பிரதிபலிப்பதாக இல்லை. கல்வராயன் மலைப்பகுதிக்கு செலவழிக்கப்பட்ட தொகை, அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அந்தப் பகுதி மக்களுக்கு முறையாக பணம் செலவு செய்யப்பட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது.

முதன்மை செயலரின் அறிக்கையில், எங்களுக்கு முழுதும் திருப்தி இல்லை. கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகள், 'அரசு பழங்குடியின உறைவிட பள்ளி' என்ற பெயரில் இயங்குகின்றன. அரசு பள்ளி என்ற பெயருடன், 'பழங்குடி' என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுவது தேவையற்றது. அவ்வாறு பயன்படுத்துவது, அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை களங்கப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

பழங்குடியின பள்ளியில் படிக்கிறோம்; மற்றவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு இணையானது இல்லை என்ற எண்ணம், அவர்களுக்கு ஏற்படும். இதை ஏற்க முடியாது. எனவே, பள்ளிகளின் பெயர்களுடன் குறிப்பிட்ட சமூகத்தை, ஜாதியை குறிக்கும் வகையிலான பெயர்களை பயன்படுத்தினால் அவற்றை அகற்ற வேண்டும்; அரசு பள்ளிகள் என்றே பெயரிட வேண்டும். அந்தப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு, அந்தப் பள்ளிகளில் அனுமதி வழங்க வேண்டும்.

இந்த 21ம் நுாற்றாண்டில் கூட, பொது மக்கள் நிதியில் இயங்கும் அரசு பள்ளிகளில், ஜாதி ரீதியிலான பெயர்களை பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது.

சமூக நீதியில் முன்னணியில் திகழும் தமிழகத்தில், அரசு பள்ளிகள் அல்லது அரசு நிறுவனங்களின் பெயருக்கு முன்னும், பின்னும், களங்கப்படுத்தும் வகையிலான வார்த்தைகளை சேர்க்க அனுமதிக்க முடியாது. இதுகுறித்து, அரசின் தலைமைச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விசாரணையை, ஆகஸ்ட் 2க்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.