WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 24, 2025

‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்வதில் ஆசிரியர்களின் பணிச்சுமை கணிசமாக குறைப்பு: பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு.

 


பள்ளிக்கல்வி துறையின் எமிஸ் தளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்வதில் ஆசிரியர்களின் பணிச்சுமை கணி்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் முழு விவரங்களும் பள்ளிக்கல்வி துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) வலைதளத்தில் பராமரிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள்தான் இந்த தகவல்களை பதிவேற்றம் செய்கின்றனர்.

எமிஸ் பதிவு பணிகள் கூடுதல் பணிச்சுமையாக இருப்பதாகவும், இதனால் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் தொடர்ந்து கூறியதால், பதிவேற்ற பணிகளில் இருந்து சில செயல்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், அந்த பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது குறித்து பரிந்துரை செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.


அந்த குழு பரிந்துரைப்படி எமிஸ் பதிவை மேற்கொள்வதில் இருந்து ஆசிரியர்களுக்கு கூடுதல் விலக்கு அளிக்க முடிவானது. இந்த நடைமுறை பிப்ரவரி இறுதியில் அமலாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருமாதம் முன்பாக, இப்போதே செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.


இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம், தொடக்க கல்வி துறை இயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: எமிஸ் தளத்தில் இருந்து அடல் ஆய்வகம் தொகுதி பதிவு அகற்றப்படும். நிதி, நன்கொடை, தகவல் தொடர்பு, மனுக்கள், செயல்முறை, உதவித் தொகை, மாணவர் ஊக்கம், ஆசிரியர் கால அட்டவணை, மாதாந்திர அறிக்கைகள், மின் கட்டணம் தொடர்பான பதிவுகளும் நீக்கப்படுகின்றன. மேலும், ஆசிரியர் நிபுணத்துவ மேம்பாடு, வாசிப்பு இயக்கம், கலை திருவிழா, இலவச பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட சில விவரங்களை பதிவு செய்வதிலும் பணிகள் சற்று குறைக்கப்பட்டுள்ளன.


இதுதவிர, பள்ளிகளில் செயல்படும் அனைத்து மன்றங்கள் சார்ந்த விவரங்களை தனித்தனியே பதிவிட அவசியம் இல்லை. இவை அனைத்தும் ‘ஹவுஸ் சிஸ்டம்’ என்ற அலகின்கீழ் கொண்டு வரப்படும். இடைநிற்றலை பொருத்தவரை, 15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றிய விவரத்தை பதிவேற்றம் செய்தால் போதும். இந்த மாற்றங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும். இதன்மூலம் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் பணிச்சுமை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் பணிகளில் அவர்கள் கவனம் செலுத்த இது உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.