தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, மாணவர்கள் கல்வி தடைப்படாமல் இருக்க முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பபடும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உயர்கல்வி நலத்திட்டங்கள்
தமிழ்நாட்டில் கல்வித்துறையில் மாணவர்கள் சிறந்து விளங்கவும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை கிடைக்கவும், தொழில்முனைவோர்களாக வரவும் ஏராளமான முன்னெடுப்புகள் எடுக்கப்படுகிறது. அதில் குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வியில் சேரும் வகையில், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. திறன் வளர்ச்சிக்காக நான் முதல்வன் திட்டம், வேலைவாய்ப்பிற்காக வெற்றி நிச்சயம் திட்டம் ஆகியவை வெற்றி பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது.
இந்நிலையில், உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டண சுமையில்லாமல் படிக்க அரசு கல்லூரிகளின் எண்ணிக்கையும், இடங்களும் அதிகரிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும், இந்த கல்வி ஆண்டு மட்டும் 16 கல்லூரிகள் திறக்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். மேலும் புதிதாக 15,000 இடங்கள் கூடுதாக சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய பாடப்பிரிவுகளும் இந்த கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளன.
உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப முதலமைச்சர் ஆணை
மாணவர்கள் அதிகளவில் இந்த கல்வி ஆண்டில் சேர்ந்துள்ள நிலையில், அவர்கள் கல்விக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில், 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
4,000 உதவி பேராசிரிய பணியிடங்கள் தேர்வு
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகி, மே வரை விண்ணப்பம் பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இதற்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களினால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை அதற்கான தேர்வு நடைபெறவில்லை. செட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால், கால தாமதம் ஏற்படுவதாக எண்ணப்பட்ட நிலையில், முடிவுகள் வெளியான பின்னரும் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கெளரவ விரிவுரையாளர்கள்
இதனிடையே, இந்த ஆண்டு ஜூலை மாதம் 516 கெளரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, இன்னும் 881 கெளரவ விரிவுரையாளர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள்.
அறிவிப்பு எப்போது?
4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு 1 வருடம் கடந்தும் நடைபெறவில்லை. இதனிடையே கெளரவ விரிவுரையாளர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், தற்போது 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் சற்று குழப்பம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களின் நிலை என்ன, காலிப்பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டதா அல்லது தற்போது வெளியாகி இருப்பதுதான் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவைமட்டுமின்றி, நிரந்தர பணியிடங்களில் கெளரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமின்றி, கடந்த ஒரு வருடத்தில் புதிதாக தகுதிப் பெற்றவர்கள் விரைவில் நடவிருக்கும் தேர்விற்கு விண்ணப்பிக்க வழிவகுக்க வேண்டும் என்பதும் கோரிக்கையில் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.