மத்திய அரசிடம் இருந்து நிதி விடுவிக்கப்பட்ட நிலையில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல், இந்த ஆண்டு பெற்றோர்களால் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. பள்ளிகளின் ஏற்கனவே இந்த கல்வி ஆண்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களில் இருந்து 25 சதவீத பேர் தேர்வு செய்து அவர்களின் பட்டியலை வழங்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என ஏராளமான மாணவர்களின் பெற்றோர்கள் காத்திருந்த நிலையில், தற்போது ஏற்கனவே பணம் கட்டி சேர்க்கை பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கே எதிராக உள்ளதாக RTE மாணவர் சேர்க்கைக்கு தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்த நிதி விடுக்கவிக்க வித்திட்ட மனுதாரர் வே.ஈசுவரன் கூறுகிறார்.
கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர் சேர்க்கை
அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்திலும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இச்சட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்கள் இணையதளம் (https://rteadmission.tnschools.gov.in/) வழியாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. மாணவர்கள் தேர்வு செய்த பள்ளிகளுக்கு பட்டியல் அனுப்பப்பட்டு, சேர்க்கை நடைபெறும். 25 சதவீத இடங்களுக்கு அதிகமான விண்ணப்பிக்கும் பட்சம் குலுக்கல் முறையில் தேர்வுச் செய்யப்படுவார்கள். எல்.கே.ஜி அல்லது 1-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் வரை பயனடைந்தனர்.
நிறுத்தப்பட்ட RTE சேர்க்கை
இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து RTE-க்கு வரவேண்டிய கல்வி நிதி வராத காரணத்தினால், 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இதனால், RTE சேர்க்கைக்காக எதிர்பார்த்துக் காத்துகொண்டிருந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
கட்டாய கல்வி சட்டத்தில் மாணவர் சேர்க்கையை தொடங்கக் கோரி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே ஈசுவரன் பொது நல மனுவை தாக்கல் செய்தார். இதன் விசாரணையில், புதிய தேசியக் கொள்கையையும், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தையும் இணைக்கக்கூடாது எனவும், கல்வி நிதியை வழங்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்தது. இதனைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், மத்திய அரசு நிதியை விடுவித்தது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.