சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் தொடர்ந்து 3-வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட போது கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால், சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை. இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில், கடந்த டிச. 26-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து, 3-வது நாளாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். நுழைவு வாயிலில் அமர்ந்து ஏராளமான ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர். அப்போது சில ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10 திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டம் இன்றும் (29-ம் தேதி) தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.