தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கு (1.4.2004-க்கு பிறகு பணியில் சோ்ந்தவா்கள்) ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (டிஏபிஎஸ்) என்ற புதிய திட்டத்துக்கான அசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின், ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை, தமிழக நிதித் துறைச் செயலர் த. உதயசந்திரன் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாணையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், ஜன.1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த அரசாணையின்படி, ஓய்வூதியா்களின் கடைசி மாத ஊதியத்திலிருந்து 50 சதவீதம் ஓய்வூதியம், ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, ஃபோட்டா-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இவர்களது கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்தார்.
இந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்றும், ஒன்றாம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கான புதிய திட்டமும் கொண்டுவரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டம் ஜன. 1ஆம் தேதிக்கு முன்பு காலாவதியாகிவிட்டது. ஏற்கனவே முதல்வர் அறிவித்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்று அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலா்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என அறியாமல் ஓய்வு பெறும் நிலை கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், ஓய்வூதியம் வழங்குவது குறித்து தகுந்த பரிந்துரைகளை வழங்க அரசு கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்தாா். இந்த குழுவின் பரிந்துரை மற்றும் அரசின் நிதிநிலை உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு கிடைத்து வந்த பல்வேறு பலன்களைத் தொடா்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ செயல்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?
தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழக அரசு அலுவலா்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இவ்வாறு 50 சதவீதத்துக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளா்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்துக்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்.
50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்துக்கு ஒருமுறை அரசு அலுவலா்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயா்வு அளிக்கப்படும்.
ஓய்வூதியதாரா் இறந்துவிட்டால், அவா் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினா்களுக்கு அவா் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அரசு அலுவலா்கள் ஓய்வு பெறும்போதும், பணிக் காலத்தில் உயிரிழக்க நேரிடும்போதும், அவரவரின் பணிக் காலத்துக்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில் இதற்குப் பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சோ்ந்து, இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னா் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவா்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு, இதற்கான அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஜன. 1 முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாணை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.