WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 15, 2026

நவோதயாவுக்கு முட்டுக்கட்டை போடும் தமிழக அரசு; இரட்டை நிலைப்பாட்டால் மாணவர்கள் தவிப்பு.

 


மும்மொழிக் கொள்கையை காரணம் காட்டி, மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் செயல்படும், நவோதயா பள்ளிகளை தொடங்க தமிழக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதற்கு போட்டியாக, தமிழக அரசின் 'மாதிரிப் பள்ளிகள்' உள்ளதாக தம்பட்டம் அடிக்கப்படுகிறது. ஆனால், இந்த பள்ளிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு, நவோதயா பள்ளிகளுக்கு ஈடாகுமா என்ற கேள்வி எழுகிறது.


தமிழகத்தில், 2021 - 22 கல்வியாண்டில், 10 பள்ளிகளுடன் தொடங்கப்பட்ட மாதிரிப் பள்ளிகள் திட்டம், தற்போது 38 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் கல்வி, விளையாட்டு என சிறந்து விளங்கும் மாணவர்கள் இக்கற்பித்தல் முறைக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாணவர்களின் செயல்பாடுகள் அனைத்தும், 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்யப்படுவதால், அதன் தரவுகளை கொண்டே சேர்க்கை நடக்கிறது.

அதாவது, மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் தேர்வில் (என்.எம்.எம்.எஸ்.,) தேர்ச்சி பெற்றவர்கள், வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுபவர்கள் மற்றும் கலை, விளையாட்டுத் திறனில் சிறந்த மாணவர்கள், மாவட்ட வாரியாகத் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

வெளிப்பார்வைக்கு இப்பள்ளிகள் பிரம்மாண்டமாக தோன்றினாலும், பல மாவட்டங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. திருப்பூர், ராமநாதபுரம் போன்ற சில மாவட்டங்களில், மாதிரி பள்ளிகள் வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. கோவை ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி, மாதிரி பள்ளியாக மாற்றப்பட்டு தற்போது, 275 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பள்ளியிலிருந்து, 7 பேர் எம்.பி.பி.எஸ்., 4 பேர் கால்நடை மருத்துவம், மற்றும் ஐந்துக்கும் மேற்பட்டோர் என்.ஐ.டி., - ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, 39 மாணவர்கள் கிளாட், சிபட், ஏ.பி.யு., நிம்ஹான்ஸ் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் வாயிலாக முன்னணிக் கல்வி நிறுவனங்களில் இடம்பிடித்துள்ளனர்.

கேள்விக்குறி

மாநில பாடத்திட்டத்தில் படித்தும், மாணவர்கள் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்; பாடத்திட்டம் சிறந்த தரமானது என அரசு கூறினாலும், போட்டித் தேர்வுகளுக்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்கள் கொண்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்கின்றனர், ஆசிரியர்கள். தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'மாதிரி பள்ளி என்பது ஒரு சிறிய நிவாரணமே தவிர, முழுமையான தீர்வல்ல.

அங்கு ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஆனால், அப்பள்ளிகளுக்கென தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. மாவட்டத்தில் உள்ள பிற அரசு பள்ளிகளில் சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்களை, மாற்றுப்பணியில், மாதிரி பள்ளிகளில் பணி அமர்த்துகின்றனர். இதனால், சாதாரண அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. அனைவருக்கும் சம உரிமை என கூறும் அரசு, நடைமுறையில், அதை பின்பற்றுவதில்லை' என்றனர்.

கைநழுவும் பொக்கிஷம்

பெரும்பாலான மாதிரி பள்ளிகளில், 6ம் வகுப்பில் இருந்து மாணவர் சேர்க்கை நடப்பதில்லை. கோவையில் இந்த ஆண்டுதான், 9ம் வகுப்பு சேர்க்கையே துவங்கியுள்ளது. ஆனால், நவோதயா பள்ளிகள் அமைந்தால், 6 முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர்களுக்கான சம்பளம், மாணவர்களுக்கான உணவு, உறைவிடம் என, 100 சதவீத செலவையும் மத்திய அரசே ஏற்கும்.

மாநில அரசுக்கு நிதிச்சுமை இல்லை; இடத்தை மட்டும் கொடுத்தால் போதும். 75 சதவீதம் கிராமப்புற மாணவர்கள், 33 சதவீதம் மாணவியர், 15 சதவீதம் எஸ்சி., 7.5 சதவீதம் எஸ்டி., மாணவர்களுக்கு கட்டாய இடஒதுக்கீடு உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரி பள்ளிகள் இருப்பதாக அரசு சொன்னாலும், நவோதயா பள்ளிகளில் கிடைக்கும் 6ம் வகுப்பு முதல் தொடங்கும் முறையான கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் மத்திய அரசின் நிதி உதவி ஆகியவற்றைத் தமிழக மாணவர்கள் இழந்து வருகின்றனர் என்பதே நிதர்சனம். கொள்கை பிடிவாதம் ஒருபுறம் இருந்தாலும், கிராமப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கை.

உயர்தர இலவச கல்வி இழப்பு

தமிழகத்தை தவிர, நாடு முழுவதும், 638 மாவட்டங்களில் 661 நவோதயா பள்ளிகள் உள்ளன. இவற்றில் படிக்கும், மூன்று லட்சம் மாணவர்களில், 78 சதவீதம் பேர் கிராமப்புற ஏழைகள். 80 சதவீதம் பேர் நீட் தேர்விலும், 20 சதவீதம் பேர் ஜே.இ.இ., தேர்விலும், எவ்வித சிறப்பு பயிற்சியும் இன்றி வெற்றி பெறுகின்றனர். ஆயிரக்கணக்கான தகுதியுள்ள கிராமப்புற மாணவர்கள் உயர்தர இலவசக் கல்வியை இழந்து வருகின்றனர். தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பே நவோதயா பள்ளிகள் வந்திருந்தால், 40 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் பயனடைந்திருப்பர்.

ஆண்டு தோறும், 1,000 மாணவர்கள் எந்தவித பயிற்சி கட்டணமும் இன்றி, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று டாக்டராகி இருப்பர். நவோதயா பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை தாய்மொழி (தமிழ்) தான் பயிற்று மொழி. அதன் பிறகே ஆங்கிலம் வருகிறது. எனவே, இது 'தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006'க்கு எதிரானது அல்ல. மேலும், தமிழக அரசின் அரசாணை - எண் 145 படி, கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

- பாலகுருசாமி , முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலை.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.