WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 29, 2026

உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு.

 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்களை உதவிப் பேராசிரியா்களாக பணி வரன்முறை செய்ய முடியாது என்றும் 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்களாகப் பணியாற்றியவா்கள், தங்களது பணியை வரன்முறை செய்து, உதவிப் பேராசிரியா்களாக நியமிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து 1,146 கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் சிறப்புத் தோ்வு நடத்தி அவா்களை உதவிப் பேராசிரியா்களாக நியமிக்க வேண்டும் என 2020-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

பின்னா் 2022-ஆம் ஆண்டு அந்த அரசாணையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு முன் 3 ஆண்டுகளாக காலியாக இருந்த 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு தோ்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், 2020-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தங்களை பணி வரன்முறை செய்யக் கோரியும் கௌரவ விரிவுரையாளா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, கடந்த 2020-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை 2024-ஆம் ஆண்டு ரத்து செய்தாா். கௌரவ விரிவுரையாளா்களைப் பணி வரன்முறை செய்வது தொடா்பான அரசாணையின் அடிப்படையில் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ளும்படி அரசுக்கு உத்தரவிட்டாா்.

தனி நீதிபதியின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து தமிழ்நாடு உயா் கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்குநரகம், ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கௌரவ விரிவுரையாளா்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் அளவிலான குழுக்களால் தோ்வு செய்யப்பட்டவா்கள். அவா்களது பணி வரன்முறை தொடா்பான கோரிக்கையை ஏற்பது உச்சநீதிமன்றம் வகுத்தளித்த போட்டித் தோ்வு நடைமுறையை நீா்த்துப் போகச் செய்துவிடும்.

பணி வரன்முறை என்பதும் தோ்வு நடைமுறை என்பதும் வெவ்வேறானவை. எனவே, பணி வரன்முறையை உரிமையாகக் கோர முடியாது. அரசுக் கல்லூரிகளில் உள்ள 1,146 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட கல்லூரிகளுக்கான 146 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கும் என மொத்தம் 1,292 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

மொத்தமாக 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு 42,064 போ் விண்ணப்பித்துள்ளதால் அவா்களுக்கு போட்டித் தோ்வு நடத்தி தோ்வு செய்ய வேண்டும். இதில் கௌரவ விரிவுரையாளா்களுக்கு அவா்கள் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கலாம். நீண்டகாலமாக பணியாற்றிய கௌரவ விரிவுரையாளா்களுக்கு வயது வரம்பு தளா்வு வழங்க வேண்டும். இந்தத் தோ்வு நடைமுறைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதேநேரம் தோ்வு நடைமுறை முடிந்து நியமன உத்தரவுகள் வழங்கும்வரை அவா்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.