பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் இடங்களில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் உள்ள சுமார் 1.70 லட்சம் இடங்கள் பொதுக் கலந்தாய்வு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
மாணவர் சேர்க்கைப்பணிகளை தமிழக அரசு சார்பில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மேற்கொள்கிறது. இந்நிலையில், வரும் 2026-27-ம் கல்வி ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.விசாகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பிஇ, பிடெக் இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 3 (நேற்று) முதல் ஜூன் 2-ம் தேதி வரை நடைபெறும். www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப நடைமுறை, கால அட்டவணை, சான்றிதழ்கள் பதிவேற்றும் முறை (ஒலி - ஒளி வாயிலாக), கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரி பாடப்பிரிவு மற்றும் வகுப்பு வாரியாக கட்ஆஃப் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள், பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள், சிறப்பு ஒதுக்கீட்டில் சேருவதற்கான சான்றிதழ் மாதிரிகள் உள்ளிட்ட தகவல்களும் இணையதளத்தில் உள்ளன.
விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இணையதள வசதி இல்லாதவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 110 பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் முகவரி, தொடர்பு எண்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் சிறப்பு அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 1800-425-0110 என்ற எண்ணில் இந்த மையத்தை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.