தமிழகத்தில் மாணவர் சேர்க்கை குறைந்த அரசுப் பள்ளிகளை மூட மாட்டோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் 2023-24, 2024-25 மற்றும் 2025-26-ம் ஆண்டுகளில் பொதுத் தேர்வுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.
விஐடி அண்ணா அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை தாங்கிய வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, “தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் அதன் தரத்தை உயர்த்துவதற்கு வேண்டிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அதேநேரம், 51,000 தனியார் பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 246 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. காரணம் மாணவர்கள் இல்லாததுதான். 1,204 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை. அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு சமமாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பதை அமைச்சர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, “தவெக அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் ஒரு அரசுப் பள்ளியைக்கூட மூடவில்லை. மாணவர் சேர்க்கை குறைந்த அரசுப் பள்ளிகளை மூட மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
யாரோ ஒரு ஏழை வீட்டுக் குழந்தையும் படிக்க வேண்டும் என்பதற்காக ஒற்றை ஆசிரியருடன் ஒரு பள்ளிக்கூடம் காத்திருக்கிறது. ஒரு மாணவனுக்காக அந்த அரசுப் பள்ளிகளை நாங்கள் மூட மாட்டோம்; மூடவும் விட மாட்டோம்.
நடப்பாண்டில் பள்ளிக்கல்விக்காக ரூ.44,557 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிறைவு திட்டத்தின் கீழ் 3,734 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.2,132 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. 10,000 அரசுப் பள்ளிகளில் தூய்மை குடிநீர், கழிப்பறை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சூப்பர் கிளீன்,சூப்பர் கேம்பஸ் திட்டத்துக்காக ரூ.139 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
விழாவில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 341 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், அறங்காவலர் ரமணி பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.