WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, November 13, 2014

தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை: 2 நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் 20–ந்தேதிக்கு
முன்பே தொடங்கியது. அப்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒரு வாரத்துக்கு மேல் தொடர் மழை கொட்டியது. இடையில் சில நாட்கள் மழை ஓய்ந்து வெயில் அடித்தது. தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை காணப்பட்டது. அதன்பிறகு அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வறண்ட வானிலையின் போக்கை மாற்றியது. அது தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறிய நிலையில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வலு இழந்து ஆந்திர கடற்கரையை அடைந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அந்தமான் அருகே தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி இலங்கை மற்றும் தமிழகத்தையொட்டியுள்ள தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் பருவமழை மேலும் தீவிரம் அடைகிறது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:–
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை 8.30 மணி நிலவரப்படி மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை–மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டியுள்ள தென் தமிழக கடலோரப்பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துள்ளது. அதிக பட்சமாக ராமேஸ்வரத்தில் 15 செ.மீ. மழையும், திருத்துறைப்பூண்டியில் 14 செ.மீ. மழையும், சோழவரத்தில் 11 செ.மீ. மழையும், தாமரைப்பாக்கம், பூண்டியில் 10 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மதுக்கூர், மகாபலிபுரம், பொன்னேரி, பூந்தமல்லி, செங்கல்பட்டு, தாம்பரத்தில் 9 செ.மீ. மழையும், சென்னையில் 8 செ.மீ. மழையும் பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை வரை) மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழையும் ஓரிரு இடங்களில் மிக கன மழைக்கும் வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில் சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். சென்னையைப் பொறுத் தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் மாதத்தில் 1–ந்தேதி முதல் 12–ந்தேதி வரை தமிழ்நாட்டில் சராசரியாக 275.6 மி.மீ. மழை பெய்யும். தற்போது 1–ந்தேதி முதல் 12–ந்தேதி வரை 268.5 சதவீத மழை பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் மாதம் முடிய 3 மாதத்தில் தமிழகத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்ய வேண்டும். இன்று வரை 29 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்னும் 40 நாட்கள் இருக்கும் நிலையில் சராசரி மழை அளவை எட்ட 15 செ.மீ. மழையே பெய்ய வேண்டும். இவ்வாறு ரமணன் கூறினார். கடந்த 3 நாட்களாக தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க் கிழமை) இரவு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. காலை வரை மழை இடை விடாமல் கொட்டியது. பகலில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. மாலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி இரவு முழுவதும் விடியவிடிய மழை கொட்டித்தீர்த்தது. இன்று 3–வது நாளாக மழை நீடித்தது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் ஓடியது. சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தொடர் மழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாநகராட்சி சார்பில் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல இடங்களில் சாலைகள் கடுமையாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த இரு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வேலூர், திருவண்ணாமலை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், ஈரோடு, சேலம், திருச்சி, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 நாட்களாக மழை நீடிக்கிறது. தொடர் மழை காரணமாக வேலூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்துக்குள் பரவி இருப்பதால் 15–ந்தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணி வரை பலத்த மழை நீடிக்கும். அடுத்த வாரமும் விட்டு விட்டு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மைய இணைய தளம் தெரிவிக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டு அணை மூடப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.