பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 53 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரை நடைபெற உள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 36 ஆயிரத்து 17 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் ஆன்லைனில் சரிபார்க்கப்பட்டன.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் வெளியிட்டார். தொடர்ந்து, 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற 53 மாணவர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஸ்வநாதன் கூறியது: “பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் தரவரிசையை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
தரவரிசை பட்டியலில் 53 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர். அவர்களில் மாநில பாடத்திட்ட மாணவர்கள் 39 பேர். சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர வாரிய பாடத்திட்ட மாணவர்கள் 14 பேர். தருமபுரி மாணவி எஸ்.அக்ஷிதா முதலிடத்தையும், திருப்பூர் மாணவர் ஏ.ரோஹித் பாலன் 2-ம் இடத்தையும், நாமக்கல் மாணவர் ஏ.வெங்கடகிருஷ்ணன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான தரவரிசையில் 46,604 பேரும், விளையாட்டு பிரிவினருக்கான தரவரிசையில் 3,210 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான தரவரிசையில் 1,176 பேரும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 500 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து தரவரிசையில் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலோ மாணவர்கள் ஜூலை 6-ம் தேதிக்குள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தை (TFC) நேரில் அணுகி குறைகளை பதிவுசெய்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
அதேபோல், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கோராமல் விடுபட்ட அரசு பள்ளி மாணவர்களும் (6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்தவர்கள்) மேற்கண்ட மையத்துக்கு நேரில் சென்று பெயரை இணைத்துக்கொள்ளலாம்.
முதல்கட்டமாக 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள்) ஜூலை 13, 14-ம் தேதிகளிலும், சிறப்பு பிரிவினருக்கான பொது கலந்தாய்வு ஜூலை 15 முதல் 18-ம் தேதி வரையும் இணையவழியில் நடைபெறும்.
பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இணையவழியில் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளது. துணை கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வுகளும் செப்டம்பர் 10-ம் தேதிக்குள் முடிக்கப்படும்.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை:
பொறியியல் படிப்பில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 594 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக 19,657 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களின் பொறியியல் கல்லூரிகளின் ஆய்வுப் பணிக்கு பிறகு தெரிய வரும். தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகள் கட்டாய நன்கொடை வாங்கக் கூடாது என்பது விதிமுறை.
துணைவேந்தர் நியமன விவகாரம்:
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான நீதிமன்ற வழக்கு ஜூலை 29-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக முதல்வருடன் கலந்தாலோசித்தேன்.
ஒரு பல்கலைக்கழகத்தின் தலைமை பதவி துணைவேந்தர் பதவிதான். துணைவேந்தர் நியமன பிரச்சினை குறித்து சட்ட நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு கூட்டம் விரைவில் நடத்தப்படும். ஏற்கெனவே பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை.
வரும் டிசம்பரில் 2 துணைவேந்தர்களின் பதவிக் காலமும் அடுத்த ஆண்டு ஜனவரியில் இன்னொரு துணைவேந்தரின் பதவிக் காலமும் முடிவடைகிறது. எனவே, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்கள் இல்லாத சூழல் ஏற்படும்.
அரசு கலை கல்லூரிகளில் ஏறத்தாழ 8 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சம்பளத்தை உயர்த்தலாமா அல்லது நிரந்தர விரிவுரையாளர்களை நியமிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.