சென்னை, டிச. 6–
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
அரசு பள்ளிகளில் சிறப்பாசிரியர் நியமனம் தகுதித்தேர்வின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்; வேலை வாய்ப்பக பதிவு மூப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்நடவடிக்கை ஏழை, கிராமப்புற பட்டதாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.
தமிழ்நாட்டில் அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி, இசை, தையல், ஓவியம் ஆகிய கலைகளை கற்றுத்தருவதற்காக சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்பணியிடங்கள் உருவாக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை வேலை வாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 17.11.2014ஆம் ஆண்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையில் இனி சிறப்பாசிரியர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் இந்த புதிய நிலைப்பாடு சமூக நீதிக்கு எதிரானது. இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித்தேர்வின் மூலம் நியமிப்பதே தவறானது என்ற கருத்து கல்வியாளர்கள் மற்றும் சமூக நீதியாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சிறப்பாசிரியர்களையும் தகுதித்தேர்வின் மூலம் நியமிக்க துடிப்பது சரியானதல்ல. இதன்மூலம் சிறப்பாசிரியர்களுக்கான கல்வித் தகுதி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
நீண்ட காலமாக வேலைக்காக காத்திருப்பவர்களும், தமிழக அரசால் கடந்த 2012 ஆம் ஆண்டில் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்ட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் பெரும்பாலானோரும் 40 வயதைக் கடந்தவர்கள் ஆவர். இவர்களாலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களாலும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது கடினமானதாகும்.
அதுமட்டுமின்றி, ஆசிரியர் பணியிலிருந்து சிறப்பாசிரியர் பணி பல வழிகளில் மாறுபட்டதாகும். ஆசிரியர் பணி என்பது ஏட்டுக்கல்வியை மாணவர்களுக்கு கற்பிப்பதாகும். ஆனால், சிறப்பாசிரியர் பணி என்பது கலையை பயிற்றுவிப்பதாகும். இப்பணிக்கு கலை அறிவும், கற்பிக்கும் திறனும் தான் மிகவும் முக்கியமானது ஆகும். இவற்றைத் தகுதித் தேர்வின் மூலம் அளவிட முடியாது என்பதைக் கூட உணராமல் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. மதுரை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாகவே இந்த தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுவதாக அரசு கூறுவதையும் ஏற்க முடியாது.
மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிராக இருப்பதாக கருதினால், உடனடியாக அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து நீதியை நிலை நாட்டியிருக்கவேண்டும். ஏதேனும் வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்யும் தமிழக அரசு, சிறப்பாசிரியர்களுக்கு எதிரான இந்த வழக்கில் மட்டும் அவ்வாறு செய்யாமல், நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக செயல்படுத்தியது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
தகுதித் தேர்வுக்கான நேர் காணலுக்கு 5 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண் வழங்கப்படும் விதம் முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். ஆளுமை மற்றும் தோற்றப்பொலிவுக்கு 1.5 மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுமைக்கும், தோற்றப் பொலிவுக்கும் துல்லியமான வரையறை இல்லாத நிலையில், எந்த அடிப்படையில் இதற்கான மதிப்பெண் வழங்கப்படும் என்பது தெரியவில்லை.
ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்கு கூடுதலான மதிப்பெண் வழங்கி, அவர்களை பணியில் அமர்த்தவே இந்த முறை பயன்படும். ஆசிரியர்களுக்கான உடை விதியையும், கண்ணியத்தையும் அப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கடைபிடித்தாக வேண்டும் என்ற நிலையில், தோற்றப் பொலிவை பார்த்து மதிப்பெண் வழங்கப்போவதாகக் கூறுவது முறையல்ல. அறிவுசார்ந்த பணிக்கு புற அழகின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது புனிதமான ஆசிரியர் பணியின் மதிப்பைக் குறைத்து விடும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இசை, ஓவியம், தையல் போன்ற கலைப்படிப்புகளை படித்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சிறப்பாசிரியர் நியமனத்திற்கான தகுதித் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும். அரசுப் பள்ளிகளில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமார் 16,000 பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு உடனடியாக பணிநிலைப்பு வழங்குவதுடன், இனி வரும் காலங்களிலும் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில்தான் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.